* சகல வேட்பாளர்களினதும் விலாசம் 392, காலிவீதி, கொழும்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) நேற்று முன்தினம் புதன்கிழமை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யோகரட்ணம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பேரது பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட அதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் பெயரில் எஸ்.பத்மசேன என்பவரால் இரு பெண்கள் உட்பட 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சகல வேட்பாளர்களும் தங்களது விலாசமாக 392, காலி வீதி, கொழும்பு என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் புதன்கிழமை கூறுகையில்;
வேட்பு மனுக்கள் சமாதான நீதிவான் ஒருவரால் சிபார்சு செய்யப்பட்டதால் அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாடுள்ளது.
கையெழுத்துகள் பரிசீலிக்கப்படும், எனினும் அடையாளங்கள் குறித்து கேள்வி எழுப்பமாட்டோமெனத் தெரிவித்தன.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை இந்தக் கட்சியின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் 17 வேட்பாளர்களில் 14 பேரது அடையாள அட்டை இலக்கங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.