* அரசாங்கம் தெரிவிப்பு
-எம்.ஏ.எம்.நிலாம்-
கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்காக பிள்ளையான் குழுநிராயுத பாணிகளாக்கப்பட மாட்டாதென உறுதிபடத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், தேர்தலை ஜனநாயக ரீதியில் வன்முறைகளின்றி நடத்தி முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நீதியாகவும், நேர்மையுடனும் நடத்துவதில் அரசு தீவிர ஈடுபாட்டைக் காட்டி வருகின்றது. நாட்டின் அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் வன்முறைகளற்றதாகவும், நீதியாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் காணப்பட்ட போதிலும் அத்தேர்தலின் போது அவர்கள் ஒரு ஆயுதத்தைக் கூட பயன்படுத்த வில்லை. எவரும் அச்சுறுத்தப்படவோ தாக்கப்படவோ இல்லை. ஒரு கொலை அச்சுறுத்தல் கூட இடம்பெறவில்லை.
இந்த நிலையில் பிள்ளையான்குழுவை நிராயுதபாணிகளாக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ, அரசுக்கு ஏற்படவில்லை. அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே எதிரணியினர் பிள்ளையான் குழுவை நிராயுதபாணிகளாக்க வேண்டுமென பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணிகளாக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. அரசு அக்குழுவை நிராயுதபாணிகளாக்கப் போவதுமில்லை. அக்குழு ஆயுதங்களை வைத்திருந்தாலும் தேர்தல் பிரசாரங்களின் போதோ, வாக்களிப்பின் போதோ ஆயுதங்களைக் கொண்டு திரியவில்லை. மக்களை அச்சுறுத்தவுமில்லை. அவர்கள் ஜனநாயகரீதியிலேயே மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலின் போது நடந்து கொண்டனர்.உள்ளூராட்சித் தேர்தலின் போதும், வாக்களிப்பு தினத்திலும் அவர்கள் ஆயுதங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டு நடமாடவில்லை.
எதிர்காலத்திலும் அது போன்றே அவர்கள் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றது. அதை மீறி சட்டரீதியற்ற முறையில் எவராவது தேர்தல் காலத்தில் ஆயுதங்களுடன் நடமாடினால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்குமாறு அரசு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. இன்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் கூட போட்டியிட முன்வந்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். இத்தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தி முடிக்க இது உதவும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட முக்கியமான மூவர் தமது எம்.பி.பதவிகளைத் துறந்து மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதன் மூலம் இத்தேர்தலின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அரச தரப்பினரோ, எதிர்க்கட்சிகளோ கிழக்கின் முதலமைச்சர் யார் என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை. தேர்தல் முடிந்து வெற்றியீட்டும் கட்சி முதலமைச்சர் யார் என்பதை அறிவிக்கும். முன் கூட்டியே அதைத்தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.