-எம்.ஏ.எம். நிலாம்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கான அனுமதியைக் கோரி சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முன்னர் ஹக்கீம் அமைச்சராகப் பதவி வகித்த வேளையில் வழங்கப்பட்ட அமைச்சுப் பாதுகாப்பு அமைச்சுப் பதவியைத் துறந்ததும் குறைக்கப்பட்டிருந்தது.
தற்போது அவருக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரவூப் ஹக்கீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்தார். தற்போது அவர் எம்.பி. பதவியில் இல்லாததால் இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பை மீளப்பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் இதற்கான அனுமதியைக் கோரி சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் இடம்பெறவிருக்கின்றது. இன்று உயர் நீதிமன்றில் விசாரணை இடம்பெறும் போது எதிர் மனுதாரரான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது சட்டத் தரணிகள் சகிதம் ஆஜராகவிருப்பதாகவும் தமது ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதை நீதிமன்றில் ஆட்சேபிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
தம்மைப் பழிவாங்கும் நோக்கிலேயே அரசு இந்த நடவடிக்கையிலீடுபட்டுள்ளதாகத் தெரிவித்த ஹக்கீம், எனது உரிமையை சட்ட ரீதியாக உறுதி செய்து கொள்வதற்கான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்.