Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
37 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 1316 பேர் போட்டிக்களத்தில் குதிப்பு
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பூர்த்தி

மே 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1,316 வேட்பாளர்கள் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 377 வேட்பாளர்களினதும் மட்டக்களப்பில் 378 வேட்பாளர்களினதும் அம்பாறையில் 561 வேட்பாளர்களினதும் நியமனப்பத்திரங்கள் மாவட்ட தெரிவத்தாட்சி உதவித் தலைமை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

திருகோணமலையில்...

திருகோணமலை மாவட்டத்தில் பத்து ஆசனங்களுக்காக பத்து அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 377 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இந்தத் தேர்தலுக்காக 14 அரசியல் கட்சிகளும் 19 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

எனினும், இதில் முஸ்லிம் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு, ஈழவர் ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழ்க் கூட்டணி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கமைய இத்தேர்தலில் திருமலை மாவட்டத்திலிருந்து 10 கட்சிகளைச் சேர்ந்த 130 வேட்பாளர்களும் 19 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 247 வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களை 2,42,463 வாக்காளர்கள் தெரிவுசெய்வர்.

மட்டக்களப்பில்....

மட்டக்களப்பில் 11 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 378 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தத் தேர்தலுக்காக 14 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

எனினும், இதில் ருகுணு ஜனதாக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றினதும் ஏ.எல்.எம்.பாரூக் தலைமையிலான சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கமைய இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 12 கட்சிகளைச் சேர்ந்த 168 வேட்பாளர்களும் 15 சுயேச்சை குழுக்களைச் சேர்ந்த 210 வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களை 3, 30, 459 வாக்காளர்கள் தெரிவு செய்வர்.

இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி., ஐக்கிய சோசலிசக் கட்சி, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, ஷ்ரீ லங்கா தேசிய முன்னணி, முஸ்லிம் விடுதலை முன்னணி, ஷ்ரீ லங்கா மக்கள் முற் போக்கு முன்னணி மற்றும் சிங்கள மகா சம்பந்த பூமிபுத்திர கட்சி என்பன போட்டியிடுகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா தொகுதிகளிலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அம்பாறையில்...

அம்பாறையில் 14 ஆசனங்களுக்காக 11 அரசியல் கட்சிகள் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 561 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் இந்தத் தேர்தலுக்காக 14 அரசியல் கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

எனினும், இதில் ஷ்ரீலங்கா முற்போக்கு முன்னணி, அகில இலங்கை தமிழர் கூட்டணி, ஷ்ரீலங்கா தேசிய முன்னணி கட்சிகளதும் நான்கு சுயேச்சைக் குழுக்களதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கமைய இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 11 கட்சிகளைச் சேர்ந்த 187 வேட்பாளர்களும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 374 வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களை 4,09,308 வாக்காளர்கள் தெரிவுசெய்வர்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com