பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தருக்கு, அந்நாட்டு கிரிக்கெட் சபை 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதற்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கப்டன்கள் இம்ரான் கான், ஜாவிட்மியான்டாட், சஹீர் அபாஸ் ஆகியோர் அக்தர் மீதான தடைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
`அக்தருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழிவை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது' என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
அவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ள முடியாதது. சபையின் தவறான கொள்கைகளால் நல்ல வீரர்களை நாம் இழந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
வீரர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அது மிகவும் தீவிரமாக இருப்பதை நான் எதிர்க்கிறேன். சபையின் கொள்கை குறித்து விமர்சித்ததற்காக ஐந்து ஆண்டுகள் தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மியான்டாட் தெரிவித்தார்.
அதேபோல் முன்னாள் கப்டன் சஹீர் அபாஸ், இக்பால் காசிம், ரசீப் லதீப் உள்ளிட்டோரும் அக்தருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இதே நேரம் அக்தருக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அவருடைய ரசிகர்கள் கோஷமிட்டனர். நிருபர்கள் கூட்டத்துக்கு வந்த அவருக்கு பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் சிறப்பான வரவேற்பளித்தனர். சிலர் அவரை தோளில் தூக்கிக் கொண்டு அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.