சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை செயலதிகாரியாக தென்னாபிரிக்காவின் ஹரூன் லார்கட் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) தலைமை செயலதிகாரியான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மால்கம் ஸ்பீட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து,அந்தப் பொறுப்புக்கு தென்னாபிரிக்காவின் இம்தியாஸ் பட்டேல் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 3 நாட்களுக்கு முன் அந்த வாய்ப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
இதனால், புதிய தலைமை செயலதிகாரியைத் தேடும் பணியை ஐ.சி.சி. தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பில் தென்னாபிரிக்காவின் ஹரூன் லார்கட் பெயர் முதலிடத்தில் உள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.சி. தேர்வுத் தலைவர் டேவிட் மோர்கான் நேற்று லார்கட்டை கேப்டவுனில் சந்தித்துப் பேசவிருந்தார். அடுத்த 10 நாட்களுக்குள் புதிய தலைமைச் செயலதிகாரியை நியமிக்க ஐ.சி.சி. முனைந்து வருவதாகவும் இதில் லார்கட்டுக்கு 99 சதவீத வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.