காலகண்டன்
சூரியன் உதயமாகும்போது வெளிவரும் முதற் செங்கதிர்களைத் தரிசிப்பவர்கள் கிழக்கிலங்கையின் மக்கள். வளமும் வனப்பும் மிக்க அந்த எழுவான் கரைகளை உள்ளடக்கிய கிழக்கு மாகாணம் தொடராக அனுபவித்த துன்பதுயரங்களும் கொடுமைகளும் இழப்புகளும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவைகளாகும். பலிகொடுத்த உயிர்களும் கொட்டிய இரத்தமும் வடித்த கண்ணீரும் கொஞ்ச நஞ்சமல்ல. புயல், வெள்ளம், போராட்டம், யுத்தம், இயக்க மோதல், கடல்கோள், கிழக்கு மீட்பு போன்றவற்றால் உலுப்பி எடுக்கப்பட்டவர்கள் கிழக்கின் மக்கள். அவற்றின் கடுமையான பாதிப்புகளும் பட்ட காயங்களும் அவலங்களும் இன்னும் மாறவில்லை. இந்நிலையிலே தான் இப்போது தனியே பிரித்தெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்குத் தேர்தல் இடம்பெற இருக்கிறது.
மகிந்த சிந்தனையில் கூறப்பட்ட ஒவ்வொரு வரிகளையும் சொற்களையும் நடைமுறைப்படுத்தி வருவதாகப் பெருமைபேசிக்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் கிழக்கை சொர்க்கபுரியாக மாற்றச் சபதம் செய்து நிற்கிறார். அதன் வழியில் கிழக்கின் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தல் நடைபெற இருப்பதாகவும் அதன் ஊடாக கிழக்கில் ஜனநாயகமும், அபிவிருத்தியும் கைகோர்த்துச் செல்லும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி அதேபாதையில் இதேவழிமுறைகளில் வடக்கையும் வழிநடத்தப்போவதாகவும் நேற்று முந்திய தினம் மீள் உரைப்புச் செய்திருக்கிறார் ஜனாதிபதி.
இன்று அரசாங்கம் மூன்று முனைகளில் கடும் புயல்களை எதிர்நோக்கி நிற்கின்றது. வடக்கிலே யுத்தப் புயல், கிழக்கிலே தேர்தல் புயல், தெற்கிலே வாழ்க்கைச் செலவுப் புயல். இவை மூன்றும் மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு கடும் சவால்களும் சோதனைகளுமாகும். அவற்றை அந்தந்த முனைகளிலே எதிர்கொள்வதற்கு ஏற்ற தந்திரோபாயங்களையும் காய்நகர்த்தல்களையும் அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்கள் வகுத்து நிற்கிறார்கள். அவ்வாறே எதிர்த் தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை வலுப்படுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் இப்போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முக்கிய கவனிப்பைப் பெறுகிறது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள கிழக்கு மாகாணசபைக்கு 37 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இத்தேர்தல் ஏற்கனவே சுமுகமாக இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் போன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படுவதாகவே அரசியல் அவதானிகள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்துள்ளனர். காரணம் இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஆளும் கட்சியான ஐ.ம.சு.முன்னணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. முன்னையதில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பின்னையதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கமும் இணைந்து பங்குகொள்கின்றன. அத்துடன், ஈ.பி.டி.பி. உட்பட வேறும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தலில் பங்குகொள்கின்றன. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் மொத்தம் 89 அணிகள் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக இத்தேர்தல் ஒரு ஜனநாயகத் தேர்தல் என்றும் பரப்புரை செய்யப்படுகிறது. அது எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பதை அடுத்து வரும் நாட்களும் வாரங்களும்தான் தீர்மானிக்கப்போகின்றன.
இத்தேர்தலில் பங்குகொள்ளும் கட்சிகள் குழுக்கள் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு எத்தகைய சூழலில் இக்கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுகின்றது என்பதைப் பற்றி நாலு வார்த்தைகள் கூறியே ஆகவேண்டும். கிழக்கு மாகாணம் இன்று நேற்று அல்ல கடந்த நூற்றாண்டின் நடுக் கூறுக்கு முன்பிருந்தே பேரினவாதிகளின் கபடத்தனமான கண்களுக்குள்ளும் சூழ்ச்சிகரமான திட்டங்களுக்கும் அகப்படுத்தப்பட்டது. முக்கியமாக திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் கிழக்கின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டன. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அத்திசையில் வழிநடத்தப்பட்டன. அங்கு தமிழர்கள் மட்டுமன்றி முஸ்லிம் மக்களும் தத்தமது தனித்துவங்களையும், நிலங்களையும் இழக்கலாயினர்.
இடையே ஏற்பட்ட தமிழர் போராட்டங்கள் யுத்தங்கள் பேரினவாதத்தின் தொடர் முயற்சிகளைத் தாமதப்படுத்திய போதிலும் அண்மைய கிழக்கின் மீட்பு எனப்பட்டதன் பின்பு தமது பேரினவாதத் திட்டங்களை முனைப்பாக்கி முன்னெடுப்பதில் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அதன் வழியிலானதே கிழக்கின் உள்ளூராட்சித் தேர்தலும் மாகாணசபைக்கான தேர்தலுமாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இத்தேர்தல் மூலம் கிழக்கில் காட்டி வரும் அக்கறையானது அங்கு பேரினவாதப் பிடியை இறுக்கிக்கொள்ள இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
இந்நோக்கத்தை நிறைவேற்றும் பாதையிலேயே ஐ.ம.சு.முன்னணியின் தலைமையில் தமிழ் முஸ்லிம் அமைப்புகளை ஒன்றிணைத்து களம் இறங்கி நிற்கிறார்கள். குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளாக விளங்கிய கிழக்கு மாகாணப் பிரிவினரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அரசாங்கம் அரவணைத்து நிற்கின்றது.
கிழக்கு மீட்பின் போது கருணாவையும் பிள்ளையானையும் தலைமைத்துவமாகக் கொண்ட அந்த அணி இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தலில் நிற்கின்றது. ஏற்கனவே உள்ளூராட்சிச் சபைகளில் அந்த அணி அமோக வெற்றியும் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சூழலிலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட மாட்டாது என்பதை அரசாங்கம் அடித்துக் கூறிவருகிறது. ஆனால், அந்த ஆயுதங்களால் சுதந்திரமான ஜனநாயகத் தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை என்றே எதிர்த்தரப்பினர் உட்பட சுயாதீன அமைப்புகளும் சுட்டிக் காட்டிவருகின்றன. ஆனால், அரசாங்கம் ஏற்கனவே இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலை உதாரணம் காட்டி ஆயுதம் வைத்திருப்பதை நியாயப்படுத்துகிறது.
அரசாங்கக் கட்சியுடன் மேலும் முஸ்லிம் அமைச்சர்கள் சார்ந்த அமைப்புகளும் தனிநபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த ஹிஸ்புல்லாவும் அவரது ஆதரவாளர்களும் அலரிமாளிகைக்கு வந்து ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்துப் படம் பிடித்து ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளர்களாகி உள்ளனர். தமது அணியில் சிங்கள தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் இணைந்திருப்பதை அரசாங்கம் தனக்குரிய சக புள்ளியாக்கிக் கொள்ள முன்நிற்கிறது.
அதேவேளை, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் மக்களின் அதிக வாக்குகளையும், கணிசமான ஆசனங்களையும் தனித்துப் போட்டியிட்டுபெற்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இம்மாகாணசபைத் தேர்தலிலும் முன்னைய நடைமுறையைப் பேணித் தனித்துப் போட்டியிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் இம் மாகாணசபையில் போட்டியிடுவது பற்றிப் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டும் வந்தார். முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து தனித்துவத்துடன் போட்டியிட வேண்டும் எனப் பெருவாரியான சாதாரண முஸ்லிம் மக்கள் விரும்பினர். ஆனால், இறுதி நேரத்தில் ஆச்சரியம் தரும் வகையில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரவூப் ஹக்கீம் , பஷீர் சேகுதாவுத் , ஹசன் அலி ஆகியோர் தமது பாராளுமன்றப் பதவிகளை இராஜிநாமாச் செய்து கொண்டனர். மாகாண சபைத் தேர்தலில் தமது தனித்துவத்தின் சின்னம் எனக் கூறி வந்த மரத்தைக் கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மரச்சின்னமும் மறைந்த அஷ்ரப் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியைத் தேடித்தந்தவர்கள் என்று உரத்துக் கூறி வந்தவர்கள். இன்று ஐக்கிய தேசியக் கட்சியிடம் தமது முகவரியை இழந்து நிற்கின்றனர்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அங்கு ஜனநாயகம் இல்லை எனக்கூறித் தேர்தலில் பங்கு கொள்ளாத ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் பங்குகொள்ள எடுத்த தீர்மானம் வியப்பளித்தது. அதிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளைத்து மரச்சின்னத்தைக் கைவிடச் செய்து தமது யானைச் சின்னத்தை ஏற்றுக் கொள்ள வைத்த நிகழ்வு பல்வேறு அரசியல் ஊகங்களை வலுப்படுத்தியுள்ளது. நியமன இறுதி நாளுக்கு மூன்று நாட்கள் முன்பாகவே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் இந்தியா சென்று திரும்பினார். அவர் நாடு திரும்பிய பின்பே வேட்பாளர் பட்டியல் இறுதியாக்கப்படும் என்றே சிறிக்கோத்தாவில் இருந்து அறிவிப்புச் செய்யப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கா நாடு திரும்பிய பின்பே முஸ்லிம் காங்கிரஸ் அதிரடியாகத் தமது பாராளுமன்றப் பதவிகளை ராஜிநாமாச் செய்ததுடன் யானைச் சின்னத்தில் போட்டியிடவும் முன் வந்தது.
இத்தகைய பின்புலம் இந்தியாவின் மறைமுகப் பாத்திரத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் 1987 இல் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் அஷ்ரப்பையும் முதல் முதலாகத் தேர்தல் களத்தில் இறக்கியது இந்தியக் கரங்களேயாகும். அதே கரங்கள் தான் இப்போதும் செயல்பட்டிருக்கிறது என்றே நம்ப இடம் உண்டு. அத்துடன் அண்மைக் காலமாக இந்துப் பத்திரிகை 13 ஆவது திருத்தம் பற்றியும் மாகாண சபைத் தேர்தல் பற்றியும் சிலாகித்து எழுதியே வருகிறது. இந்துவின் நாடித் துடிப்பு டில்லியின் இதயத்துடிப்பை துல்லியமாகக் காட்டக் கூடியதாகும். எவ்வாறாயினும் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா அதிக அக்கறையுடன் காய்களை நகர்த்தி வருகின்றமைக்கு கிழக்கின் தேர்தல் களத்தில் ரணில்-ஹக்கீம் கூட்டு தகுந்த கட்சியமாகும்.
கிழக்கின் தேர்தலை தாம் நிராகரித்திருப்பதாகத் தமிழ்க் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. அங்கு ஜனநாயகம், சுதந்திரம் இல்லாத சூழலில் ஆயுத அச்சுறுத்தல் மேலோங்கி நிற்பதை கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. கிழக்கில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்க் கூட்டமைப்பினர் அங்கு சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அங்கு மட்டுமல்லாது வடக்கில் கூட அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான். ஒருகாலத்தில் பாராளுமன்றப் பரப்பில் வடக்கு, கிழக்கைக் கட்டியாண்டவர்கள் இதே தமிழரசுக்கட்சியினர் என்பது நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியம் இன்று சிதைந்து சின்னா பின்னப்பட்டு நிற்பது தான் பரிதாபகரமானது. இந்நிலை எப்படி ஏற்பட்டது என்பதோ முன் வைக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதக் கொள்கைகளின் தவறுகள் எவை என்பதோ உரியவாறு சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படாத வரை மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசியவாத நிலைப்பாடு நெருக்கடிகளையும் சிதைவுகளையும் சந்திக்கவே செய்யும் என்பதே அனுபவம் தரும் பாடமாகும்.
இந்நிலையில் கிழக்கில் நடைபெறும் தேர்தலில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் என்பன இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளுக்குப் பின்னால் சோரம் போய் நிற்பது தான் விசனத்திற்குரியதாகும். கிழக்கு மாகாணத்தைப் பேரினவாதப் பிடிக்குள் கொண்டு வந்து சகல நிலைகளாலும் தமிழ் மக்களை மட்டுமன்றி முஸ்லிம் மக்களையும் ஓரங்கட்டி வந்த இரண்டு கட்சிகளின் தலைமையில் மாகாணசபைத் தேர்தலில் பங்கு கொள்வது தலைகுனிவுக்கு உரியதாகும் . இத்தகைய நிலைப்பாடு கிழக்கில் மட்டுமன்றி முழு நாட்டிலும் பேரினவாத ஒடுக்குமுறைக்கு பலம் சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியேயாகும்.