அதிகரித்துச் செல்லும் அரிசியின் விலை சர்வதேச உதவி முகவர் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் உதவித்திட்டங்களை பாதிப்படையச் செய்யக்கூடிய அதே வேளையில், ஆசியாக்கண்டத்திலுள்ள பல அரசாங்கங்களில் அரிசியிலேற்படும் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய சமூகக் கொந்தளிப்பு மற்றும் உணவு சம்பந்தமான கலவரங்களுக்கு வழிவகுக்காத நிலையைத் தவிர்க்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் இப்பிராந்தியத்தில் அரிசியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. தாய்லாந்து உட்பட சில நாடுகளில் நுகர்வோர் பதற்றத்துடன் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கின்ற அதேவேளை, பல உணவுற்பத்தியாளர்கள் எதிர்வரும் காலங்களில் தமது தானியத் தேவைகளுக்கு அதிகரித்த பணத்தொகையை செலவிட நேரிடும் என்ற அச்சத்தில் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கின்றனர்.
ஐ.நா.உலக உணவுத்திட்டம் உட்பட பல சர்வதேச உதவி முகவர் நிறுவனங்கள் அதிகளவு நிதியுதவி விரைவில் பெற்றுக்கொள்ளப்படாதவிடத்து, உணவிற்கு வழங்கப்படும் உதவியை பாரியளவிற் குறைக்க வேண்டியேற்படும் என அச்சம் தெரிவித்துள்ளன. பல நாடுகளில் அரிசியின் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
"அரிசி விலை ஆண்டின் ஆரம்பத்திலிருந்ததிலும் பார்க்க இரண்டு மடங்கு விலைக்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பொருளின் விலையும் அப்படியே. ஆனால் எமது சம்பளம் மாத்திரம் உயரவில்லை. எனது நகைகளை அடைவு பிடிப்பவரிடம் அடகு வைத்து இவ் வாரம் மேலதிக உணவுப் பொருட்களைப் பெற உள்ளேன். இதே விதமாகப் பொருட்களின் விலை உயர்ந்து சென்றால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனது பிள்ளையைப் பல் வைத்தியரிடமோ அல்லது பாடசாலைக்கோ கொண்டு செல்ல முடியாது" என சாதாரண பொது மகன் ஒருவர் விசனம் தெரிவித்தார்.
ஆசியா முழுவதும் தற்போதைய நிலை இது தான். கடந்த வாரம் கம்போடிய அரசாங்கம் தனது பிரஜைகளை பதற்றத்துடன் அரிசி வாங்க வேண்டாம் எனவும், பதுக்கி வைக்க வேண்டாமெனவும் கூறியுள்ளது. பல அரசாங்கங்கள் சந்தை விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரிசி ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தியுள்ளன.
கடந்த சில வாரங்களில் எகிப்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பாரிய அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் தமது ஏற்றுமதி முழுவதையுமே நிறுத்தியுள்ளன. இது ஒரு சிறிது காலத்திற்கு மாத்திரமாக இருக்கலாம். சீனாவும், வியட்நாமும் தமது ஏற்றுமதியைக் குறைத்துள்ளன.
பாங்கொக்கில் தலைமைக் காரியாலயத்தைக் கொண்டுள்ள உணவு விவசாய நிறுவனத்தின் கொள்கை அதிகாரியான சுமிற்பொங்கா "நீங்கள் உங்களது உள்ளூர் சந்தைகளில் ஸ்திரநிலையை பேணுவதற்கு ஏனைய நாடுகளுக்கு ஸ்திரமற்ற நிலையை ஏற்றுமதி செய்துள்ளீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக உலகின் தானிய அளவு மிகக்குறைந்த நிலையிலேயே இருந்து வருகிறது.1976 தொடக்கம் அரிசியின் அளவு மிகக்குறைவாகவே உள்ளது.
இந்தப்பிரச்சினைக்கு முடிவு தென்படவில்லை. மனிலாவிலுள்ள ஆசிய அபி விருத்தி வங்கியின் பொருளியலாளர் ரெட்ஜேம்ஸ் " அரிசியின் விலை அதிகளவு குறையும் என நான் எதிர்பார்க்கவில்லை." எனக் கூறுகிறார்.
எனினும் பல நிபுணர்கள் எதிர்வுகூறல்களும், தொடர்பு சாதன அறிக்கைகளும் இப்பிராந்தியத்திற்கான நெருக்கடிகளுக்கு தூபமிடுவதாகக் குறைகூறுகின்றனர். ஐ.நா.அதிகாரிகளும், தொண்டர்களும் தாய்லாந்தில் அரிசியின் விலையுயர்விற்கு அதுவே காரணம் என நம்புகின்றனர். கடந்த வாரம் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
ஆசிய பிராந்திய பொருட்களைக் கொள்வனவு செய்யும் அதிகாரியான ஜாக்குலிமான்ஸ் பத்திரிகையாளர்களுக்கு கூறியதாவது; "மக்கள் ஒரு தொன் அரிசியின் விலை ஆயிரம் டொலர்களாக உயர்வதாக கூறினால் அங்கு மக்கள் பதுக்கி வைக்கவுள்ளார்கள் என்றும், தமது பொருட்களின் மேல் உட்கார்ந்து இந்த நிலை ஏற்படும் வரை காத்திருக்க உள்ளார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம். இந்தத் தானிய மூடைகளில் மேல் உட்கார்ந்து அடையப்போகும் இலாபத்திலும் பார்க்க அதிகளவு இலாபத்தை வேறெப்படியும் பெற்றுக்கொள்ள முடியாது".
தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதியாளர் சங்கம் யூன் மாதமளவில் ஒரு தொன் அரிசியின் விலை 1000 டொலர்களை எட்டும் என்று கூறியுள்ளனர். இன்று ஒரு தொன்னின் விலை 600 -700 டொலர்கள் வரையிலுள்ளது. நாட்டின் வர்த்தக அமைச்சர் மிங்வான் சாங்சுவான் விவசாயிகளைத் தமது அரிசியை உடனடியாக விற்றுவிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் இது இன்னும் சில மாதங்களில் அதிகளவு பணத்திற்கு விற்கப்படலாம், ஆனால் இந்த விண்ணப்பம் பாரிய நெல் உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்களால் நிராகரிக்கப்பட்டது.
அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சூகியாற் ஒபஸ்வொற்சே கூறுவதாவது: "அரிசி வர்த்தகம் விநியோக பற்றாக்குறையாலும், விலைகளது தளம்பல் நிலையாலும் ஒரு நெருக்கடியைச் சந்திக்கிறது. சுதந்திரமாக சந்தைப்படுத்தலினால் விலைகள் உயர்வதை நாம் அனுமதிக்க வேண்டும். எதிர்வு கூறல்களை அடிப்படையாகக் கொண்டல்ல" என்கிறார்.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர்களான தாய்லாந்தில் ஆலையாளர்கள் நெல்லை சேகரித்து வைப்பதுமன்றி, ஏற்று மதியாளர்களுக்கும் ஒப்பந்தத்தைப் பொறுத்த அளவில் ஏமாற்று நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
"அதிகளவு நெல்லைக் கையிருப்பாக வைத்திருக்கும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவு பணத்தைப் பெறுகிறார்கள். ஆனால் ஆலையாளர்கள் அதே போல் அரிசியை வழங்குவதில்லை. அரிசியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காத அவர்களே பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள்" என்கிறார் விச்சாய் சிறிபிறசேட்.
தாய்லாந்தின் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பிறாசிற் பூன்சூயின் பிரகாரம் விவசாயிகள் விலையேற்றத்தால் நன்மையடைவதாகத் தெரியவில்லை.ஏனெனில் அவர்கள் தானியத்தைப் பாதுகாத்து வைக்கும் இடவசதியின்மையால் அதனை அறுவடை முடிந்ததும் விற்று விடுகிறார்கள். உலக உணவுத்திட்டம் உணவின் விலை விசேடமாகத் தாய்லாந்தில் உயர்வடைவதை அக்கறையுடன் கவனத்திற்கொள்வதாக குலேமான்ஸ் தெரிவிக்கிறார்.
அவர் உலக உணவுஸ்தானத்தில் பிராந்தியப் பேச்சாளர், போல்றஸ்லே ஐ.பி.எஸ்ஸிற்குக் கூறியதாவது "உலக சந்தையில் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு செல்லும் நிலையில் ஆசியா முழுவதுமுள்ள பல மில்லியன் மக்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும். நாங்கள் ஒவ்வொரு நாளும் உணவைப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். ஒவ்வொருநாளும் ஆசிய மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர்" என்றார்.
உலக உணவுஸ்தானபத்தின் கணிப்பின்படி இன்றுள்ள திட்டத்தைப் பூர்த்திசெய்ய தற்போதைய விலைகளின் பிரகாரம் இன்னும் 160 மில்லியன் டொலர்கள் தேவைப்படும்.
றைஸ்லே கூறுவதாவது : "இந்தக் குறிப்பிடத்தக்க மனிதாபிமானப் பிரச்சினை காரணமாகப் பல இடங்களில் சமூகக் கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளன. போதிய நிதியுதவி கிடைக்காதவிடத்து உ.உ ஸ்தாபனம் கொடுக்கும் அளவைக் குறைக்கவேண்டும் அல்லது இடைக்கால எல்லை நீடிக்கப்பட வேண்டும்."
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது உலக உணவுஸ்தாபனம் மாத்திரமல்ல. தமது ஆட்சியாளர்களது அட்டூழியங்களிலிருந்து தப்புவதற்காக பர்மாவின் எல்லைகளைக் கடந்து தாய்லாந்திற்குள் நுழைந்தவர்கள் அனைவருமே பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார்கள்.
தாய்லாந்து எல்லையில் அகதிகளுக்கு உணவளிக்கும் முகவர் குழுக்களின் தலைவர் ஜாக்டன் போட் கூறுகிறார்: "அரிசியின் விலையுயர்வு எங்களைக் கொல்கிறது. மிகவும் அவலநிலைக்கான மக்கள் குழு இதுவாகும்." 140,000 அகதிகளுக்கு தாய்லாந்து எல்லை நெடுகிலும் உணவு, இருப்பிடம் ஆகிய உதவிகள் கொடுக்கப்படுகின்றன. உதவிக்காக விண்ணப்பங்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், கைகூடாத நிலையில் இவர்கள் அகதிகளுக்கு வழங்கும் உதவிகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள வறிய மக்களுக்கு ஆதரவு வழங்கும் தொண்டர்களதும், ஐ.நா.அதிகாரிகளினதும் மனநிலையை றிஸ்லேயின் கூற்று பிரதிபலிக்கிறது. அவர் மேலும் கூறுவதாவது: "அரிசியின் விலை மேலும் உயர்வடைவதால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஆசிய மக்கள்தான்".
- ஐ.பி.எஸ்.