நாசரேத் கோவில்
`திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றார்கள். இதை தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வரும் தமிழர்கள் ஆசிய நாடுகள், அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.
பொதுவாக அயல் நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் அதிகமாகச் செல்வது வளைகுடா நாடுகளுக்கு. அங்கு சென்றால் பெட்டி, பெட்டியாய் பணத்தை அள்ளிக் கொண்டு வரலாம் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. அண்மைக் காலமாக அந்த நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது. இப்போது டுபாய் செல்பவர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 15 ஆண்டுகளுக்குள் இந்த தலைகீழ் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 1990 களில் வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செல்வந்தர்களாக வாழ்வது உண்மைதான். அந்த மாயையில் இப்போது அங்கு செல்பவர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். உடல் உழைப்பை மட்டுமே செலுத்தக் கூடியவர்கள்.
வளைகுடா நாடுகளில் ஒரு கட்டடத் தொழிலாளிக்கு சராசரியாக பத்தாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் உணவுக்கு நான்காயிரம், தங்கும் அறைக்கு இரண்டாயிரம் ஊரில் இருக்கும் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச ஆயிரம் என பெரும் பகுதி காலியாகிவிடும். இந்தச் செலவுகள் போக எஞ்சிய பணத்தைத்தான் வீட்டுக்கு அனுப்ப முடியும்.
ஏஜெண்டுகள் கமிஷன், விமானக் கட்டணம் என ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து வளைகுடா செல்லும் தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்பும்போது வருமானத்தை கணக்குப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.
அரபு நாடுகளில் சாலைகளைப் பெருக்குதல், கழிவறைகளைச் சுத்தம் செய்தல், ஒட்டகம் பராமரிப்பு போன்ற கௌரவமற்ற பணிகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏராளம். தினமும் 12 மணிநேர வேலை. வேலைத்தளத்தில் ஏச்சு, பேச்சுகள், பத்துக்குப் பத்து அறையில் நண்பர்களுடன் கூட்டுக் குடித்தனம்.
இப்படி குடும்பப் பாசத்தை இழந்து குறைவான வசதிகளுடன் வாழும் தமிழர்களில் எழுபது சதவீதம் பேரின் வாழ்க்கை இதுதான்.
பெண் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசம். வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் மதுபார்களில் வலுக்கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.
இதுபோன்ற கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்ததால், 30 வயதுக்குட்பட்ட பெண்களை வீட்டு வேலைக்கு அழைத்து செல்லக்கூடாது என்று மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. மேலும், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட 18 நாடுகள் இந்த நிபந்தனைகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இனிமேல் வீட்டு வேலைக்காக பெண் தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் அவர்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 400 அமெரிக்க டொலர் சம்பளம் தர வேண்டும். (இந்திய ரூபா மதிப்பில் ரூ.16,000). அதுமட்டுமன்றி ஒவ்வொரு பெண் தொழிலாளிக்கும் தலா 2,500 டொலரை (ரூ.1 இலட்சம்) இந்தியத் தூதரகத்தில் வேலைக்கு அமர்த்துபவர் டெபாசிட்டாகக் கட்ட வேண்டும். அவர்களுக்கு மொபைல் போன் வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன.
சமீபத்திய புள்ளி விபரப்படி, சரியான ஒர்க் பர்மிட்டுகள் இல்லாமல் பல்வேறு வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல இலட்சத்தை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் வளைகுடா தமிழர்களின் தலையில் மேலும் ஓர் இடி விழுந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் வளைகுடா தமிழர்கள் அனுப்பும் பணத்தின் மதிப்பு 30 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் சவூதி நாட்டு பணமான ஒரு ரியால் இந்திய மதிப்பில் ரூ.12.50 ஆக இருந்தது. இது தற்போது ரூ.11.55 ஆகக் குறைந்துவிட்டது. இதுபோன்ற ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு திராம் ரூ.12.70 இலிருந்து 11.45 ரூபாவாக குறைந்திருக்கிறது.
இதனால் நிரந்தரமாக நாட்டுக்கு திரும்பும் வளைகுடா இந்தியர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. இது வளைகுடா நாடுகளின் அரசுகளையும் கவலையடையச் செய்துள்ளது.
காரணம், 2020 ஆம் ஆண்டில் வளைகுடாவில் பணிபுரிய கூடுதலாக 13 இலட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிவில், மெக்கானிக் என்ஜினியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வளைகுடா நாட்டு அரசுகள் பேச்சு நடத்தி வருகின்றன.
இன்றைய சூழ்நிலையில் வளைகுடா நாடுகளில்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற நிலை இல்லை. இங்கேயே பல முன்னணி நிறுவனங்கள் திறமைவாய்ந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரிக்கொடுக்கின்றன.
தமிழக இளைஞர்கள் வளைகுடா கனவில் வாழ்க்கையை வீணடித்துவிடாமல் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு தாய்நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும்.
- தினமணி