Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
மக்கள் சக்திப்படையும் சட்டி பானைகளும்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசித்திரமான போராட்டமொன்றை நடத்தியது. `ஜன பல சேனா' (மக்கள் சக்திப்படை) என்ற பெயரிலான இந்தப் போராட்டத்தின் போது ஐ.தே.க. அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் பொது இடங்களில் கூடிநின்று சட்டி, பானைகளைப் போட்டுடைத்து அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். நாடு பூராவும் 120 தொகுதிகளில் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாகவும் எதிர்வரும் வாரங்களில் மேலும் கூடுதலான எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடன் பல ஆர்ப்பாட்ட இயக்கங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் ஐ.தே.க. செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டம் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் இருந்து ஆதரவைப் பெற்றது என்பது பெரியதொரு கேள்விக்குறியாகும்.

முன்னென்றுமில்லாத பாரிய பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவிக்கிறது. வாழ்க்கைச் செலவு தினமும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாளைய செலவுக்கு என்ன செய்யப்போகின்றோம் என்று ஏங்கிய வண்ணமே நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்பதை அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகள் எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் வெளிப்படையாகவே கூறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை குறித்து எந்தவிதமான கவலையும் கொண்டவர்களாக அரசாங்கத் தலைவர்கள் இல்லை. மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு பெருமளவில் கிளம்பாததால் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற அக்கறையின்றி அரசாங்கத்திடம் ஒருமெத்தனமான போக்கு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பலமுனைகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றபோதிலும், எதிரணியினரால் மக்களைத் தங்கள் பக்கம் அணிதிரட்ட முடியாத ஒரு சூழ்நிலை தற்போது காணப்படுகிறது. இது உண்மையில் ஒரு விசித்திரமான அரசியல் சூழ்நிலையாகும். இன்றைய பொருளாதார நெருக்கடியினால் உண்மையில் மக்கள் தங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கொதிப்பை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு வெகுசனப் போராட்டமாக மாற்றக் கூடிய உருப்படியான அரசியல் தந்திரோபாயம் எதிரணியிடம் கிடையாது. சமுதாயத்தின் நலிவுற்ற மக்கள் பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யினர் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்துக்கு ஆபத்து வந்துவிடக் கூடிய அளவுக்கு எந்தவிதமான போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு தயாராயில்லை. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பக் கூடியதாக பேரினவாத நோக்குடனான கோஷங்களை ஜே.வி.பி.யினர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு நெருக்கடியில் இருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கு ஏதுவாக சில நிவாரண நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு தங்களிடம் இருக்கின்ற தொழிற் சங்க பலத்தைப் பயன்படுத்துவது குறித்து ஜே.வி.பி. தலைவர்கள் சிந்திக்கிறார்களேயில்லை. போரைக் காரணம் காட்டி சகல நெருக்கடிகளிலும் இருந்து தப்பிக்கொள்வதற்கு அரசாங்கம் கையாளுகின்ற தந்திரோபாயத்துக்கு உதவியாகவே ஜே.வி.பி.யின் சகல அணுகுமுறைகளும் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

மறுபுறத்தில், ஐ.தே.க.வினர் அண்மைக் காலமாக கடைப்பிடித்துவந்திருக்கும் எந்தவொரு அணுகுமுறையுமே மக்களின் ஆதரவைப் பெறக்கூடியதாக இல்லை. கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்க உருவாக்கினார். தேசிய காங்கிரஸ் `ஜன ரல' (மக்கள் அலை) என்ற பெயரில் நாடுபூராகவும் பேரணிகளை நடத்தி அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டப்போவதாக அறிவித்து சில பேரணிகளையும் நடத்தியது. ஆனால், விக்கிரமசிங்கவும் சமரவீரவும் எதிர்பார்த்தைப் போன்று பாரிய மக்கள் அலை எதுவும் ஏற்படவில்லை. ஏற்பட்டிருந்த சிறு அலையும் நாளடைவில் அடங்கிப்போய்விட்டது. அதற்குப் பிறகு ஐ.தே.க.வினர் தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் அவ்வப்போது சில மறியல் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். எனினும், மக்கள் மத்தியில் இருந்து போதிய ஆதரவைப் பெற அவர்களால் முடியவில்லை.

இறுதியாக இப்போது எதிர்க் கட்சித் தலைவர் `மக்கள் சக்திப் படையிடம்' சட்டி பானைகளை ஆயுதமாகக் கொடுத்து போராட்டம் ஒன்றை நடத்தத் தலைப்பட்டிருக்கிறார். இதுவும் சில தினங்களில் அடங்கிப் போய்விடும் என்றுதான் நம்புகின்றோம். நீண்ட நாட்களுக்கு சட்டி, பானைகளை நடு வீதிகளில் போட்டுடைப்பதற்கு மக்கள் அலை திரண்டுவரும் என்று விக்கிரமசிங்க எதிர்பார்ப்பது அரசியல் விவேகமான காரியமல்ல. உண்மையிலேயே அவரின் அரசியல் செயன்முறைகளிலும் தந்திரோபாயங்களிலும் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெருமளவில் கிளம்பாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவாக சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் செய்கின்ற பிரசாரங்களேயாகும். இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமென்று சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டிருப்பதன் காரணத்தினால்தான் போரைக் காட்டி ஏனைய சகல நெருக்கடிகளிலும் இருந்து தப்பித்துக்கொள்ள அரசாங்கத்தினால் இயலுமாக இருக்கிறது. போரைத் தொடருவதனால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளைப் பற்றி சிங்கள மக்களுக்குக் கூறுவதற்கு விக்கிரமசிங்கவும் தற்போதைய நிலையில் தயாராயில்லை. பேரினவாத உணர்வுக்கு தீனிபோடக்கூடிய அரசியல் அணுகுமுறையையே தென்னிலங்கையின் சகல முக்கிய அரசியல் சக்திகளும் கையாளுகின்றன. தென்னிலங்கை அரசியல் அரங்கையும் சிங்கள மக்களையும் போருக்கு ஆதரவாகத் தயார்படுத்தி வைத்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாற்றீடாக ஆரோக்கியமான கொள்கைகளை சிங்கள அரசியல் சமுதாயத்திற்குள் முன்வைக்கக்கூடிய சக்திகள் இன்று இல்லாதமையே ராஜபக்ஷவின் பெரியபலமாக இருக்கிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com