* ஹிலாரி கிளின்டன்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்காக போட்டியிட்டு வரும் செனட்டர் ஹிலாரி கிளின்டன் தான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், அமெரிக்காவில் வேலையில்லாப் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் வெளி நாட்டினரை சென்றடைவதை தடை செய்யப் போவதாக உறுதியளித்துள்ள ஹிலாரி;
"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவேன். ஒவ்வொரு அமெரிக்கரின் வேலைவாய்ப்பையும் உறுதிப் படுத்துவேன்.
அமெரிக்க பாதுகாப்பு தளபாட தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதனால், நமது தொழில்நுட்பம் சீனாவுக்கு மறைமுகமாகக் கிடைக்கிறது. இதுபோல் அதிநவீன அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் வெளிநாடுகளுக்குக் கிடைப்பதைத் தடை செய்வேன். அமெரிக்க இராணுவத்தை உலகின் அசைக்க முடியாத சக்தியாக உருவாக்குவேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாநாயகக் கட்சி சார்பில் போட்டியிட ஹிலாரி கிளிண்டனுக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.