அதிர்ஷ்டலாப சீட்டில் கோடிக்கணக்கான பரிசுத் தொகையை வென்றவர் மீண்டும் மக்டொனால்ட் (Mcdonald) உணவு விடுதியில் சிப்பந்தியாக பணியில் சேர்ந்துள்ளார்.
லண்டனில் வசிப்பவர் லுக் பிட்டார்டு; வயது 25. மக்டொனால்ட் விடுதியில் பர்கர் உட்பட உணவுகளை பரிமாறும் சர்வராக வேலை செய்து வந்தார். மூன்றாண்டுக்கு முன், இவர் வாங்கிய `ஆன் - லைன்' அதிர்ஷ்டலாப சீட்டில் ரூபா 22 கோடி ஜாக்பொட் பரிசு கிடைத்தது. இதையடுத்து, வேலையை விட்டு விட்டார்; கடையில் மேற்பார்வையாளர் வேலையில் இருந்த எம்மா (வயது 29) என்ற பெண்ணை அவர் காதலித்து வந்தார்; அதிர்ஷ்டப் பரிசு கிடைத்ததும் இலட்சக்கணக்கில் செலவழித்து, திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள், அதிர்ஷ்டப் பணத்தை தண்ணீராக இறைத்து செலவழித்தனர் இந்த புதுமண ஜோடி இவர்களுக்கு இப்போது, மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு.
அதிர்ஷ்டப் பணத்தில், கார்டிப் பகுதியில் பங்களா வாங்கினார் லுக். பணக்கார வாழ்க்கை வாழ்ந்து வந்த, அவருக்கு அதன் மீதான மோகம் குறைந்து விட்டது. என்ன தான் பணக்காரராக மாற நினைத்தாலும், அவரால் முடியவில்லை. பழையபடி மக்டொனால்ட் கடையில் உள்ள தன் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்; அப்போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்' என்று முடிவு செய்தார். சமீபத்தில், மீண்டும் மக்டொனால்ட் கடையில் சர்வர் வேலைக்கு சேர்ந்தார்.
வேலையில் மீண்டும் சேர்ந்த லுக்கை சக தொழிலாளர்கள் வரவேற்றனர். மீண்டும் `பிளேட்' டை தூக்கி பர்கரை வைத்து வாடிக்கையாளருக்கு பரிமாறுவதில் தான் லுக்குக்கு சந்தோஷம் திரும்பியது.
இதுகுறித்து லுக் கூறுகையில் ;
நான் கோடீஸ்வரனாக ஆனாலும்,எனக்கு என் வேலை மீதும், என் சக தொழிலாளர்களுடனும் இருப்பதில் தான் முழு சந்தோஷம் இருக்கிறது. அந்த பழைய நிலையை, என்னால் மறக்க முடியவில்லை. அதனால், மீண்டும் வேலையில் சேர்ந்து விட்டேன்' என்றார்.