பாகிஸ்தான் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பினால் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை பதவி நீக்கம் செய்யலாமென பாகிஸ்தானின் சபாநாயகர் பெமிடா மிர்சா தெரிவித்தார்.
பாராளுமன்றத்திலும் செனட் சபையிலும் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரித்தால் முஷாரப்பை பதவி நீக்கம் செய்ய முடியும். அரசியல் சட்டப்படிதான் நான் செயற்பட முடியும் எனத் தெரிவித்த மிர்ஷா, கொள்கை அடிப்படையிலான முடிவுகளை எடுக்க பாராளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என டெய்லி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தின் 58 (2 பி) பிரிவின்படி பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்குமானால் பாராளுமன்றத்தை உயர்வானது என்று எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்டதற்கு இந்தக் கேள்வி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது என்றார் அவர். அரசியல் சட்டத்தின் 58 (2 பி) பிரிவுதான் ஜனநாயகத்தை அடிக்கடி சாய்த்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டும் . இதன் மூலம் மக்களுக்கு மறைமுகமாக அதிகாரம் வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில் ஜனநாயகம் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த பாராளுமன்றத்திடம் பாகிஸ்தான் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் எனவும் மிர்சா தெரிவித்துள்ளார்.