* மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
நேபாளத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் தோல்வியடைந்தால் மன்னரின் மாளிகையை முற்றுகையிடுவோமென மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா மிரட்டல் விடுத்துள்ளார்.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தேர்தலை சீர்குலைக்க மன்னராட்சிக்கு ஆதரவானவர்கள் சதி செய்கின்றனர். சதியின் காரணமாக நாம் தோற்றால் மன்னர் மாளிகையை முற்றுகையிடுவோம்.
மாவோயிஸ்டுகளை ஒழிக்க அமெரிக்கா, இந்தியா மற்றும் நேபாள மன்னர் குடும்பத்தினர் சதி செய்கின்றனர். வரும் 10 ஆம் திகதி தேர்தல் நடக்கிறது. சதிச் செயல் காரணமாக மாவோயிஸ்டுகள் தோற்றால் தேர்தல் முடிவை ஒப்புக் கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்தார்.
நேபாளத்தில் வாக்காளர்களையும் மற்றக் கட்சியினரையும் மாவோயிஸ்டுகள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தேர்தலில் தோற்றால் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.