தடை விதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு தொடர்ந்துள்ளது.
தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அதன் நிர்வாகிகள் மீது சொயிப் அவதூறு பரப்பும் வகையில் பேசியதற்காக அவருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப், சொயிப் அக்தர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றது என்றும், கிரிக்கெட் சபையையும் அதன் நிர்வாகிகளையும் களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் கூறினார்.
தனக்கும், கிரிக்கெட் சபைக்கும் சொயிப் அக்தர் நஷ்ட ஈடாக தலா 100 மில்லியன் ரூபா வழங்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். மேலும், அவதூறு பரப்பும் வகையில் பேசியதற்காக அக்தர் மன்னிப்பு கோர வேண்டுமென்றும் அவர் கூறினார்.
5 ஆண்டுகள் அக்தர் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்க வேண்டுமென்று நசீம் அஷ்ரப் கிரிக்கெட் ஒழுங்கு நடவடிக்கை குழுவை நிர்ப்பந்தம் செய்ததாக அக்தர் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே இந்தப் பிரச்சினையில் சமரசம் செய்து கொள்ளுமாறு இரு தரப்பினரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் கேட்டுள்ளார்.
தடையை எதிர்த்து அக்தர் நேற்று மேன்முறையீடு செய்யவிருந்தார். இது குறித்து அக்தர் கூறுகையில்,
"இந்தியா மற்றும் ஜொகனஸ் பேர்க்கில் விளையாடிய போது சூதாட்டக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். பெரும் தொகையை பெற்றுக்கொண்டு போட்டியில் மோசமாக செயல் படும்படி வற்புறுத்தினார்கள். இதனை உடனடியாக நிராகரித்தேன். எனது நாட்டுக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை" என்றார்.
ஐ.பி.எல்., போட்டிக்கு அனுமதியளிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிம் அஷ்ரப் லஞ்சம் கேட்டதாக அக்தர் குற்றம்சாட்டினார். பணம் கொடுக்க மறுத்ததால் தான், தடை விதித்ததாகக் கூறினார்.