* உதவி திட்டமிடல் பணிப்பாளர் தெரிவிப்பு
கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் பாரிய வெற்றியைத் தரவில்லை இதனைக் கருத்தில் கொண்டே கமநெகும திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் ஜன சபா திட்டமும் கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. கல்முனை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இதற்கென 4 கோடியே 20 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதோடு,இதன் இணைப்பாளராக மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸையும் நியமித்துள்ளாரென கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.க. ராஜதுரை தெரிவித்தார்.
கல்முனை நற்பிட்டிமுனை அல்அக்ஸா மகாவித்தியாலய அஹமது மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஜனசபா அபிவிருத்திக் குழு அமைக்கும் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இங்கு ராஜதுரை மேலும் தெரிவித்ததாவது;
அபிவிருத்தி என்பது அதிகாரிகளால் மட்டும் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் எனும் வாதம் எம்மிடமிருந்து விடை பெற வேண்டும். இவ்வாறான திட்டங்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை. அபிவிருத்தி வெற்றிகாண பிரதேச மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படுவதோடு, அனுபவசாலிகளின் மும்மொழிவும் சேர்க்கப்படுதல் அவசியமாகும். நகரத்தில் மாத்திரமன்றி கிராமத்தையும் அவை சென்றடையவேண்டும். இதனடிப்படையில் நற்பிட்டிமுனை பிரதேச 5 கிராம சேவையாளர் பிரிவும் தலா 14 லட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
ஜனசபா அதிகாரமிக்க அமைப்பாக எதிர்காலத்தில் மிளிரவிருக்கிறது. ஜனசபா குழுவே இத்திட்டங்களை முன் வைக்கவுள்ளது.இதற்கென கிராம மக்களின் ஆலோசனை பெறப்படும். தனிப்பட்டோரது விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமிருக்காது. திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அரச சுற்று நிருபப் பிரகாரமே இவை இயங்கும். வேலைத்திட்டங்களை கிராம அபிருத்திச் சங்கம், சமுர்த்தி சபைகள் எடுத்து செய்யமுடியும். திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஜனசபாவுக்கு இருப்பது போல், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பிரதேச செயலகத்துக்கே உரித்தாகும்
மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில் ;
கடந்த கால வீதி அபிவிருத்தி திட்டமான மகநெகும போல் ஜனசபா திட்டம் இருக்கமாட்டாது. நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் மக்களுக்கு பிரியோசனம் அளிக்கப்போகிறது. பாதகமான செயல்திட்ட அமுலாக்கம் இங்கிருக்கமாட்டாது. விடயம் தொடர்பாக நானும் மாநகரசபை உறுப்பினர் றஹாப்தீனும் உயர்மட்டத்தில் பேசியுள்ளோம். இத்திட்டத்தை முன்மாதிரியான திட்டமாக அமுல்படுத்த விரும்புகிறோம் என்று கூறினார்.
கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம்.பஸால்,யூ.எல்.பதுறுதீன், திருமதி இஸ்மாயில் ஏ.ஸீ.எஸ். ஹமீட் மாநகரசபை உறுப்பினர்களான.சீ.எம்.முபீத், ஐ .எல். றஹாப்தீன், ஏ.எம்.றியாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர்களான எம்.யு. அஸ்வர், எம். அமீனுதீன் மற்றும் ஊர்மக்கள், உலமாக்கள், நலன் விரும்பிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.