* பிரதியமைச்சர் நிஜாமுதீன் தெரிவிப்பு
முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை புறந்தள்ளி தன்னிச்சையான நோக்கில் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்ட, மாகாண சபை தேர்தலை சிறந்த ஒரு களமாக மக்கள் பயன்படுத்த வேண்டுமென, மக்கள் தோட்ட முகாமைத்துவ அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே பிரதி அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வருவதை மு.கா. தலைமை விரும்பவில்லை. அவ்வாறு ஒரு முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவாரானால், அது காங்கிரஸின் தலைமைப் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். கிழக்கு முஸ்லிம்கள் அந்த முதலமைச்சரின் பின்னால் அணி திரண்டு விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிடுவதை மு.கா.தலைமை விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தைவிட மாட்டோம்; மரச்சின்னத்திலே தான் போட்டியிடுவோம் என்று பத்திரிகை அறிக்கைகளில் வீர வசனம் பேசுகின்ற மு.கா.தலைவர், இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணங்கியதன் மர்மத்தை மக்களாகிய நீங்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் கொள்கையிலிருந்து விட்டு விலகியதன் காரணமும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்துக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்று கூறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு தரகர்கள் கொடுத்த 10 மில்லியன் பணத்தையும் பெற்றுக் கொண்டு அரசாங்கத்துக்கு துரோகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் சரித்திரத்தையும் மக்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து முஸ்லிம் தலைமைகளும் ஒன்று சேர்ந்து ஒரு அணியின் கீழ் போட்டியிட விரும்பாத மு.கா.தலைவர், கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க மாட்டார் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயமும் செல்வாக்கும் தேடுகின்ற ஒரு தலைவரை முஸ்லிம் சமூகம் இன்னும் வைத்திருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு இனியாவது புத்தி பிடிபட்டு அதன்படி நடந்து கொள்வதற்கு இறைவன் அருள் செய்ய வேண்டும்.
இத்தேர்தலில் மு.கா.தலைமைக்கு சரியான பாடம் புகட்டாவிட்டால், மு.கா.தலைமைக்கு இன்னும் அதிக கொம்புகள் முளைத்து அவர் சொல்வதை வேத வாக்காகக் கொண்டு கிழக்கு முஸ்லிம்களை கடலில் தள்ளுவதற்கும் அவர் தயங்க மாட்டார் என்பதையும் உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன் என்றார்.