புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான பொறுப்பை நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை நாட்டை ஆட்சி செய்து வந்த இரு பிரதான கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும். தவறை ஒருவர் மீது ஒருவர் சுமத்தி விட்டு இப்பிரச்சினையிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள முற்படாது இரு தரப்பினரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாத்தளை நகர பொது வாசிகசாலை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜாதிக ஹெல உறுமயவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இனப்பிரச்சினை தீர்வுக்கு அவ்வப்போது இரு பிரதான கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப் பட்டதாகும்.
இவை எந்தவகையிலும் எமது நாட்டு பிரச்சினைக்கு தீர்வாக அமையமாட்டாது. இரு பிரதான கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட்டு கருத்தொருமித்து நாட்டில் வசித்துவரும் ஒவ்வொரு சமூகத்தினதும் தனித்துவம் பேணும் வகையிலும் நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் ஏற்படாதவாறு உருவாக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் போதே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டும்.
இதேவேளை இது ஒரு பௌத்த நாடு என்பதை மறந்தும் செயல்படக்கூடாது என்றார்.