* அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை
தொழிலாளர்களுக்குரிய அனைத்து கொடுப்பனவுகளையும், உரிய காலத்தில் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும், தொழிலாளர்களின் ஓய்வு காலத்தின் போதே அக்கொடுப்பனவுகளை அனுபவித்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இ.தொ.கா.விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கொடுப்பனவுகள், தோட்ட நிர்வாகங்கள் உரிய காலநேரத்தில் செலுத்துவதில்லை என பலதரப்பட்ட இடங்களில் இருந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவர் தனது தொழிலில் ஓய்வுபெறும் தினத்திலிருந்து இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களாகியும் அவருக்குரிய அந்தக் கொடுப்பனவுகள் கிடைக்கப்பெற்றதில்லை.
பொதுவாக எல்லாக் கம்பனிகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. இது மாத்திரமல்ல தோட்டத் தொழிலாளர்கள் வங்கியில் கடன்களைப் பெற்ற போதிலும் தோட்ட நிர்வாகங்கள் அதனை மீளச் செலுத்துவதற்கு தாமதமாகின்றன. இதனால் மேலதிக வட்டிகளையும் செலுத்த வேண்டிய சூழ்நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இ.தொ.கா.பொதுச் செயலாளரும், இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பணிப்பிற்கிணங்க சகல கம்பனிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கான காத்திரமான தீர்வை பெற்றுக் கொள்ளவும், தொழிலாளர்களின் ஓய்வு காலத்தின் போதே அக்கொடுப்பனவுகளை அனுபவித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆகவே இது சம்பந்தமாக சிரேஸ்ட தொழிலுறவு இயக்குநர் சிங் பொன்னையா இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுறுத்தல்க ளையும் அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவசம, அரச பெருந் தோட்டயாக்கங்களிலே இக்கொடுப்பனவுகள் அதிகமாகவே மிகவும் தாமதமாகி வழங்கப்படுவது வழக்கமாகி விட்டது.