* பிரதியமைச்சர் சச்சிதானந்தன்
துப்பாக்கிகளால் ஒருபோதும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது. இன்றைய கொலைக் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்தார்.
மொனறாகலை பிரதேச சபையின் உதவித் தவிசாளரான டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கத்தின் படுகொலையைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
டாக்டர் முத்துலிங்கத்தினை நான் சிறு பராயம் தொட்டு நன்கறிவேன். மறைந்த அமரர் தொண்டமான் முதல் தற்போதைய தலைவர் ஆறுமுகம் தொண்டமான் வரை இ.தொ.கா.வின் வளர்ச்சியில் பங்குகொண்டு தன்னாலான பணிகளை தான்சார்ந்த சமூகத்திற்கு செய்து வந்த ஒரு பெருந்தகை அமரர் முத்துலிங்கம்.
ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலுமுள்ள அமைச்சர்களுடன் நன்கு உறவு கொண்டு குறிப்பாக மொனராகலை தோட்ட தொழிலாளிகளின் நலன்களில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர்.
தனக்குப் பட்டதை உடன் சொல்லும் ஆற்றல்மிக்கவர், அன்னாரது மரணம் தோட்ட மக்களுக்கு மாத்திரமன்றி முழு தமிழ் பேசும் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருறும் அன்னாரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் அதேவேளை, அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.