இரத்தினபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே பலத்தகாற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
மாலை நேரங்களில் அவ்வப்போது பெய்து வரும் இம் மழைகாரணமாக இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய நகருக்கு வருபவர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
பெருந்தோட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை எதிர் நோக்குகின்றனர். இது இவ்வாறிருக்க இந்த பலத்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக காவத்தை மடலகம தோட்டத்திலுள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகள் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்றன. சுமார் 25 வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரு வீடுகளில் மரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளன. பாரிய மரங்கள் இப்பகுதியில் சரிந்து வீழ்ந்துள்ளன.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இது இவ்வாறிருக்க இரத்தினபுரி கொஸ்பொலவின்ன தோட்டப்பகுதியில் கையடக்கத் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டிருந்தவர் மீது மின்னல் தாக்கியதால் அவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வறுகின்றார்.
இவரது காது துண்டிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மின்னல் தாக்கமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.