* ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பொலிஸ்காரர் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
`காந்தி சிலையடியில் வெடிச்சத்தமும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி சவாஹிர் தொலைபேசி மூலம் கூறியதாக தனது சாட்சியத்தின் போது திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம்திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களின் மரணம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சாட்சியம் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது சாட்சியத்தின் போதும் குறுக்கு விசாரணைகளின் போதும் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"நான் 1968 ஆம் ஆண்டில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் 2006 ஜனவரி முதலாம் திகதி பொலிஸ் அத்தியட்சராகப் பதவி உயர்த்தப்பட்டு அன்றுமுதல் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.
துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒருமாதமும் பத்து நாட்களும் கடமையாற்றிய நிலையில் குருநாகல் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றலாகிச் சென்றேன்.
எனது குடும்பம் குருநாகலில் வசிப்பதாலும் எனது வயது முதிர்ச்சி அடிப்படையிலுமே நான் குருநாகல் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டேன்.
நான் திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது அந்நிலையப் பொறுப்பதிகாரியாக ஜனக மாலப்பெரும என்பவர் கடமையில் இருந்த அதேசமயம் 2 அத்தியட்சர்களும் நான்கு உப அத்தியட்சர்களும் இருந்தார்கள்.
சம்பவம் நடைபெற்ற ஜனவரி இரண்டாம் திகதி 2006 ஆம் ஆண்டு சவாஹிர் தான் பதில் பொறுப்பதிகாரியாக இருந்தார்.
அன்றைய தினம் நீதிமன்ற வேலைகளின் நிமித்தம் நான் மூதூருக்குச் சென்றுவிட்டு மாலை ஐந்து மணிக்குத்தான் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பினேன்.
இந்நிலையில் அன்று இரவு 11.45 மணியளவில் நான் எமது விடுதியில் இருந்த சமயம் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் காந்திசிலையடிச் சம்பவம் தொடர்பாக அறிந்து கெண்டேன்.
மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு இளைஞர்களினதும் வாக்கு மூலத்தைப் பெறும்படி உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் இரவு 12.15 மணியளவில் திருகோணமலை மருத்துவமனைக்குச் சென்றேன்.
அங்கு காயமடைந்த இருவரிடமும் தாய், தந்தையிடமும் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டேன்.
மறுநாள் காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்ட கடற்படையினரிடம் விசாரணை செய்வதற்காக கடற்படை முகாமிற்குச் சென்று அச்சமயம் கடமையில் இருந்தவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டேன்.
மேலும் சவாஹிரின் உத்தரவின் பேரிலேயே இவ்விசாரணைகளை நான் மேற்கொண்டேன்.
அத்துடன் காந்திசிலையடியில் வெடிச்சத்தமும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாகவும் சவாஹிர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கடற்படைமுகாமில் விசாரணைகள் மேற்கொண்ட பொழுது கடற்படையினரின் சோதனைச் சாவடிகள் எங்கு உள்ளதென்பதையும் யார் யார் கடமையில் இருந்தனர் என்பதையும் அறிந்து கொண்டேன்.
இவ்விசாரணைகளின் போது என்னுடன் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒன்றரை வருடமாகப் பணியாற்றும் கருணாசேன என்பவரும் உடனிருந்தார். அதன்படி அன்றையதினம் மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை கடமையில் ஈடுபட்ட 20 கடற்படையினரின் குழுவுக்கு சூரசிங்க என்பவரே அணித் தலைவராக இருந்தார்.
அக்குழுவில் இந்திக ருவான், புஷ்பகுமார உள்ளிட்ட சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஏழுபேரின் துப்பாக்கிகளையும் பரிசோதித்தேன்.
ரி.56, ரி.81, ரி.83 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏழுபேரின் துப்பாக்கிகள் என்னால் பரிசோதிக்கப்பட்டு அவை குற்றப்புலன் விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இத்துடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமர்வில் இவரது சாட்சியம் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.