உள்ளூராட்சி தேர்தல் போன்று மாகாண சபை தேர்தலையும் அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களுக்கும் பொலிஸ் அத்தியட்சர் அலுவலகங்களுக்கும் அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேற்படி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் கட்சி பேதமின்றி பாதுகாப்பு வழங்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காமினி நவரட்ண தெரிவித்ததுடன், மாகாண சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களையும் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடு வதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை அகர வரிசையில் தயாரிக்கும் பணியினை தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆரம்பித்துள்ள நிலையில், இதனை அவர்கள் வெளியிட்டதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட நடவடிக்கை எடுத்ததாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் 1,342 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.