இவ்வருடத்தின் முதற் காலாண்டுப் பகுதியில், நாட்டின் நாணயக் கொள்கை தொடர்பில், ஒதுக்கீட்டு நிதியை சீராக நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து மத்திய வங்கியின் பொருளாதாரத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாவனையிலுள்ள நாணயத்தின் அளவை மட்டுப்படுத்துவதன் மூலம் பணநிரம்பலின் அளவைக் கட்டுப்படுத்திய அதேவேளை, கொடுகடன்கள் மூலமாக ஏற்பட்ட பணப் பாவனை அதிகரிப்பையும் மட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளமை குறித்து மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
நாட்டின் பணநிரம்பலில், ஸ்திரமான நிலையினைப் பேணும் பொருட்டு, ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட வழி முறைகளுக்குப் பதிலாக, நாளாந்த ஒதுக்கீட்டு பணத்தின் அடிப்படையில் காலாண்டுக்கான சராசரி ஒதுக்கீட்டு பண அளவு நிர்ணயிக்கப்பட்டதன் மூலம் நிதியின் அளவை சீராகப் பேணுவதில் மத்திய வங்கி வெற்றி கண்டுள்ளது.
இவ்வாறான ஒதுக்கீட்டு பணத்தின் அளவை சீராகப் பேணும் நடைமுறையின் போது, ஒதுக்கீட்டு பண முகாமைத்துவத்தில் வங்கிகளின் பங்களிப்பு கணிசமான அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் செயற்பாடு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிணங்க, சந்தை வட்டி வீதங்கள் மேல் நோக்கி சேர்க்கப்பட்டதுடன், தொடர்ந்தும் அவை உயர்ந்த மட்டத்தில் பேணப்பட்டன.
இந்த நடைமுறையின் மூலம் இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில், பணத்திற்கான கேள்வி கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைய வழியை ஏற்படுத்தியிருப்பதுடன், ஒதுக்கீட்டு பணத்தின் அளவை எதிர்பார்த்த அளவிற்கும் மேலாக பேணுவதற்கும் வழிசமைத்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.