* பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் தெரிவிப்பு
கொழும்பு, வெள்ளவத்தையிலும் கொட்டாஞ்சேனையிலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் அவர்களது பெற்றோர்கள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி அளுத்மாவத்தையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு பெரிய போரைத்தீவைச் சேர்ந்தவரும் கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் வியாபாரம் செய்து வந்தவருமான 30 வயதுடைய மாணிக்கம் மகேஸ்வரன் என்ற இளைஞரே 23 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார்.
அதேபோல வெள்ளவத்தை ஸ்டேசன் வீதியிலுள்ள ஏஞ்சல் லொட்ஜில் வெளிநாடு செல்வதற்காகத் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட கணபதி சுவேந்திரன், தம்பையா பிரபு ஆகிய இருவரும் கல்கிசை நீதிமன்றத்தினரால் விடுதலை செய்யப்பட்டதுடன், இவர்களுடன் கைதான வள்ளிபுரம் குஜேந்திரன் என்ற இளைஞரே எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கிராண்ட் பாஸ் பொலிஸாரினால் அளுத்மாவத்தையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வாய்பேச முடியாதவரான அப்புத்துரை கமலநாதன் அவரது சகோதரியான மனநிலை பாதிக்கப்பட்ட என். சந்திரதேவி ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக காலி பூஸா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இளையசகோதரரான அப்புத்துரை சந்திரதாஸ் பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், தெமட்டகொடையில் 21.01.2008 இல் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நல்லூரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய வடிவேலு ஜெகதீஸ்வரன், உமாமகேஸ்வரன், கந்தையா ஜீவரூபன் ஆகியோருடன் பூஸாவுக்கு அனுப்பப்பட்டதாக ஜெகதீஸ்வரனின் மனைவியான ஜெகதீஸ்வரி பிரதி அமைச்சரிடம் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 16 ஆம் திகதி கிருலப்பனையில் கைதான இரும்பு வேலைத்தள உரிமையாளர் காந்திகேசு சிவாஜி தொடர்ந்தும் துறைமுகப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் கைதான 13 ஊழியர்களில் குழந்தையான் ஷ்ரீஸ்வரன், ராசையா ஜீவகாந்தன் ஆகிய இருவரும் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இருளப்பன் சந்திரகுமார், குணரட்ணம் ராஜ்கிரண், ராமன் சிவகுமார், அலெக்ஸ்டென்டர் தனூஷன், ஜோசப் அலெக்ஸ்சன்டர், சண்முகவாஸ் புஸ்பராஜா, ம.கதிரேசன், ம.துர்ஷன், என்.தர்ஷன், எஸ்.மயுர்தாசன், எஸ். ஜெசிந்தன், எஸ். ஜெனிதாஸ் ஆகியோர் பூஸா முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிவாஜியின் மனைவியான தேவரஞ்சனி தெரிவித்துள்ளார்.