பிரிட்டனின் வெளிநாட்டு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் மக்லோ பிரவுண் பிரபுவை கடந்த புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்து கிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் அரசியல் செயல்திட்டம் மற்றும் அண்மைய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து படையினர் மீட்டதன் பின்னர் அங்கு அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அரசியல் செயற்திட்டம் குறித்து இதன்போது அமைச்சர் விளக்கியதுடன் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் அங்குள்ள மக்களை சக்தியளிப்பதற்கும் பன்மைத் தன்மையுள்ள அரசியலை ஏற்படுத்தும் முகமாக அதன் இடைவெளியை நிரப்புவதற்கிடமாகவே நடத்தப்பட்டதெனத் தெரிவித்தார்.
மேலும் மிக விரைவில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றவுள்ளதால் ஜனநாயக ரீதியிலான அடிப்படை இணைப்பை அங்கு ஏற்படுத்த முடிந்துள்ளது.
இத்தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதனால் இத்தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் இடம்பெறவுள்ளதென தான் நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் பிரவுணுக்கு இதன்போது தெரிவித்தார்.
மனித உரிமை தொடர்பில் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக அரசாங்கம் தேவையான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக தற்போது அடிப்படையில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் இதுகுறித்தும் விளக்கியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகால உறவுகள் மிக வலிமையாகவுள்ள நிலையில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மக்லோ பிரவுண் பிரவுணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் பொதுநலவாய செயற்பாட்டு குழுவின் நிகழ்ச்சி நிரல் குறித்து இரு அமைச்சர்களும் இதன்போது ஆராய்ந்ததுடன் அண்மைய உலக நிலைவரம் குறித்தும் கலந்துரையாடினர்.