* சச்சி உறுதியளிப்பு
வடக்கு, கிழக்கிலிருந்து தற்காலிகமாக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதிக் கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதிக் கல்வி அமைச்சர் உட்பட கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தில்லை நடராஜா, கல்வி சேவையின் உதவிச் செயலாளர் ஜானகி, பெருந்தோட்ட பாடசாலைகள் பிரிவு பணிப்பாளர் எம்.சபாரஞ்சன், பிரதிக் கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜெ.ஷ்ரீகாந்த், நிபுணத்துவ ஆலோசகர் கலாநிதி தி.கமலநாதன் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் பிரதிக் கல்வி அமைச்சர் உரையாற்றும் போது;
வட, கிழக்கிலிருந்து மேல் மாகாணத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்கள் தற்போது கிட்டத்தட்ட 18 மாதகாலமாக சம்பளங்கள் பெறாமல் உள்ளார்கள் எனவும் இவர்கள் மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் என்ற படியால் இவர்களின் சம்பளங்களை பெற்றுக் கொடுக்க சம்பள ஆணைக்குழுவிடம் அனுமதியைப் பெற்று தரப்படுமெனவும் உறுதியளித்தார்.
ஆசிரியர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் சம்பளங்கள் பெற்றுத்தரப்படும். தற்காலிகமாக மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் மேலதிகமாகவே உள்ளனர். எனவே இவர்கள் ஆசிரிய வெற்றிடங்கள் உள்ள மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.