* `எவரும் கவனம் செலுத்தவில்லை'
வடபகுதிக்கான நேரடிப் போக்குவரத்து மதவாச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் மிகப்பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து எந்தத் தரப்பும் கவனம் செலுத்தாதது குறித்து வடபகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடபகுதிக்கான ரயில் சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்படுகின்றது. தென்பகுதிக்கு செல்லும் வட பகுதி பயணிகள் மதவாச்சி சோதனை நிலையம் வரை பஸ்களில் சென்று, அங்கிருந்து 150 ரூபா செலவழித்து ரயில் நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்ல வேண்டியுள்ளது.
ரயில் நிலையத்தில் பயணிகள் தமது விபரங்களை பதிவு செய்ய நீண்ட நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. அங்கு கடமையிலிருக்கும் பொலிஸார் தாமதமாகவே தமது பணிகளை செய்கின்றார்கள். இதனாலேயே நீண்ட நேரத்திற்கு பயணிகள் பதிவுகளைச் செய்யக் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். அதிகாலை கொழும்பு கோட்டையிலிருந்து வரும் ரயில் பயணிகள் கூட பதிவுகளை மேற்கொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மதவாச்சி சோதனை நிலையம் 24 மணி நேரமும் இயங்குவது போல் காட்சி தருகின்றது. ஆனால், இரவு 9 மணிக்குப் பின் மதவாச்சியிலிருந்து வவுனியாவிற்கு எந்தவித போக்குவரத்துகளுமே இல்லாது பயணிகள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மதவாச்சி சோதனை நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு வகையிலான கஸ்ஷ்டங்களையும் பயணிகள் அனுபவிக்கின்றனர். பல்வேறு மட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டபோதிலும் தீர்வுகள் காணப்படவில்லை.