தம்புள்ள பிரதேச செயலகப் பிரிவிலமைந்துள்ள `ரத்மகஹஎல' கிராம சேவையாளர் பிரிவின் பெண் கிராமசேவை அதிகாரி நேற்று முன்தினம் வியாழக்கிழமை இனம் தெரியாத இருவரின் அசிட் வீச்சுக்கு இலக்கானார்.
தம்புள்ள பதில் கிராம சேவையாளராக கடமையாற்றும் இந்திரா குமாரி ஏக்க நாயக்க (வயது 47) என்ற இரு பிள்ளைகளின் தாயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமையின் பொருட்டு தமது காரியாலயம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரில் ஒருவர் இந்த `அசிட்' தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருப்பதாக தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸ்ஸ லால் டி சில்வா தெரிவித்தார்.
`அசிட்' தாக்குதலுக்குள்ளான பெண் கிராம சேவை அதிகாரியின் கண்ணொன்று முற்றாக பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவர் கண்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.
இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் குறித்த கிராம சேவைப் பெண் அதிகாரி சந்தேக நபர் எதிர்பார்த்த விதத்தில் நற்சான்றுப் பத்திரம் வழங்காமையால் ஏற்பட்டிருந்த குரோதம் காரணமாக இந்த அசிட் வீச்சை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, அசிட் வீச்சை நடத்திச் சென்ற இருவரில் ஒருவருக்கும் சம்பவத்தின்போது காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதற்கான சான்றுகள் சம்பவ இடத்தில் காணப் படுவதாகவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க கிராம சேவைப் பெண் அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து தம்புள்ள பிரதேச செயலக ஊழியர்களும், கிராம சேவை உத்தியோகத்தர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முதலானோரும் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தினர்.
தம்புள்ள பிரதேச செயலகத்திலிருந்து தம்புள்ள மணிக்கூண்டுக் கோபுரச் சந்தி மற்றும் தம்புள்ள பஸ் நிலையம், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தினூடாக சுலோகங்களைக் கோஷித்தவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
அரச ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கு! அரசாங்க ஊழியரையும் கிராமசேவை அதிகாரிகளையும் காப்பாற்று! கொடியவர்களைக் கைது செய்! போன்ற சுலோகங்களை ஏந்திக் கோஷமிட்டவாறு இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.