* திருமலையில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே
ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று தலைவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜிநாமாச் செய்ய வைத்து தனது கட்சியின் தலைமை வேட்பாளர்களாக நியமித்திருப்பது இதனை வெளிப்படுத்துகிறது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, திருமலை மாவட்ட செயலக வளவில் செய்தியாளர் மத்தியில் பேசும்போது கூறினார்.
`ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பை ரத்துச் செய்துவிட்டு கிழக்கு என்று தனியான மாகாணசபைத் தேர்தலை நடத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறது. இணைப்பை ரத்துச் செய்ததை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரிப்பது வெளிப்படுகிறது என்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறினார்.
திருமலை மாவட்டத்தில் 60 கிலோமீற்றர் தூர நெடுஞ்சாலை அபிவிருத்தி வேலையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஐந்து ஆறு தடவைகள் அத்திவாரக் கல் நட்டும் நிர்மாணிக்கப்படாத கிண்ணியாதுறை மீதான பாலத்தை எமது அரசாங்கம் நிர்மாணித்து வருகிறது. இதன் நிர்மாண வேலைகளின் முக்காற்பங்கு நிறைவேறியுள்ளன. திருமலை மக்கள் இவற்றை கருத்திற்கொண்டு தேர்தலில் அரசாங்கக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்குக் குறைந்து வருவதையே அக்கட்சி ஐக்கியதேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிட முன்வந்திருப்பது காட்டுவதாக ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம் அஸ்வர் செய்தியாளர்களிடம் கூறினார்.
றிஷாத் பதியுதீன்
இது இவ்வாறிருக்க ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கடைப்பிடிக்கும் அணுகுமுறை, முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பபை இல்லாதொழிப்பதாக அமையும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் திருமலையில் செய்தியாளர் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.
ஐ.தே.க. முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை இல்லாமற் செய்யவே உதவும் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலே பிறந்த ஹிஸ்புல்லா முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் அவருக்குக் கூடுதலாக வாக்களித்து கிழக்கு மாகாணத்தில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். மூன்று இன மக்களும் ஒற்றுமையாக கிழக்கு மாகாணத்தில் வாழவேண்டும். அதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.