* ஆதரவாளர்களிடையே கைகலப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கிண்ணியாவைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது ஆதரவாளர்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
கிண்ணியாவின் பல்வேறு வீதிகளூடாகவும் மேற்படி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் வாகனத்தில் பவனி வந்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் சட்டத்தரணி எச்.எல்.எம். பாயிஸ், மௌலவி எஸ்.எம்.எம்.ஹஸன், டாக்டர் ஏ.எம்.லாபிர் ஆகியோர் தனித்தனியாக ஊர்வலத்தில் வந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். மஹ்ரூப் ஊர்வலமாக வந்த அதேவேளை இக்கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் (முஸ்லிம் காங்கிரஸ்) ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஊர்வலத் திட்டத்தைக் கைவிட்டு திரும்பினர்.
இதேவேளை, வியாழன் இரவு 8 மணியளவில் கிண்ணியா அல்-அக்ஸா சந்தியிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் ஒரே கட்சி ஆதரவாளர்களிடையே கைகலப்பு மூண்டது. இதனால் சில மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
உடனடியாக அங்கு வந்த பொலிஸார் மோதலை அடக்க கண்ணீர் புகைக்குண்டுப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து குழுமியிருந்தோர் கலைந்து சென்றனர்.