* பிரிட்டனில் அமைச்சர் போகொல்லாகம
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படாமலிருப்பதை பார்ப்பதே எமது முழு முயற்சியுமாகும். நாங்கள் அதனைப் பார்க்க விரும்புகின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கூறியுள்ளார்.
பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம பிரிட்டிஷ் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் `ஏசியா ருடே` தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான நிக்கௌவிங் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் ரோகித்த போகொல்லாகம அளித்த பதில்களும் வருமாறு;
நிக்கௌவிங்: ஆறு வருட கால யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் இலங்கை அரசாங்கம் விலகி கொண்டு இரு மாதங்கள் கடந்துவிட்டன. அடுத்த டிசம்பருக்குள் அச்சுறுத்தலை இல்லாமல் செய்து விடுமென்று அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த இரு நாட்களில் வடக்கில் 60 புலிகளை கொன்றுவிட்டதாக இராணுவம் கூறியுள்ளது. ஒரு போராளியை இழந்துவிட்டதாகவும் 25 படையினர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் கூறுகின்றனர். இவை சுயாதீனமாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. முன்னேற்றமா? இல்லையா? புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள் என்று ஏன் நாங்கள் நம்ப வேண்டும்? எமக்கு எண்ணிக்கையை தந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் எம்மிடம் சுயாதீனமான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட விபரங்கள் கிடையாது.
போகொல்லாகம: அண்மைக்கால நடவடிக்கைகள் நாங்கள் எவ்வளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு தெளிவு படுத்தும். இன்று கிழக்கு ஜனநாயகத்தை அரவணைத்துள்ளது. மேயில் பாரிய தேர்தலொன்றை அங்கு நடத்தவுள்ளோம். கடந்த காலத்தில் நாம் தெரிவித்திருந்தமை இப்போது உண்மையாகியுள்ளது. அதேபோன்று வடக்கிலும் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இலக்குகளின் அடிப்படையில் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை இடம்பெறுகின்றது.
நிக்கௌவிங்: ஆனால் உங்களிடம் இதனைக் கேட்க வேண்டியுள்ளது. கிழக்கில் வெகுதுரிதமாக தேர்தலுக்கு சென்றமை மிகவும் சுவாரஸ்யமான விடயமாகும். ஏனெனில், டிசம்பரில் புலிகளை இல்லாமல் செய்துவிடப் போவதாக கூறியிருந்தீர்கள். இப்போது ஏன் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். அதாவது நேற்று 60 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஏன் தொகையை தெரிவிக்க வேண்டும்?
போகொல்லாகம: டிசம்பர் இன்னமும் வரவில்லை. இப்போது மார்ச் முடிந்து ஏப்ரலுக்குள் பிரவேசித்துள்ளோம். நாங்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. எங்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கிழக்கில் நாம் அடைந்த முன்னேற்றத்தை உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். பயங்கர வாதத்தை ஒழிப்பதும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும் பன்மைத்தன்மையான சமூகத்தை வென்றெடுப்பதும் எமது இலக்காகும்.
நிக்கௌவிங்: உள்ளூராட்சி தேர்தலை எடுத்துக்கொண்டால், தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஏதாவது நம்பிக்கை கொண்டுள்ளீர்களா? உங்கள் இலக்கு நீண்டதாக உள்ளது. யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து அதிகளவு மிதவாதத் தமிழர்களை நடவடிக்கைகளில் உள்ளீர்க்கத் தூண்டுவதும் உங்கள் நீண்ட கால நோக்கமா?
போகொல்லாகம: தமிழ் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் முக்கியமான சமூகத்தவர்களாவர். ஆனால், பயங்கரவாதிகளிடமிருந்து தமிழர்களை வேறுபடுத்த விரும்புகிறோம். கிழக்கில் இது தொடர்பாக நாம் வெற்றி கண்டுள்ளோம்.
நிக்கௌவிங்: ஆனால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இப்போதும் ஆயுதங்களுடன் இருப்பதே உண்மையாகும். சிறுவர்களை ஆயுதங்களை தூக்க இப்போதும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக சௌகரியமாக நீங்கள் உள்ளீர்களா?
போகொல்லாகம: அதெல்லாம் ஒன்றுமில்லை. அக்குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர்கள் முன்னர் புலிகளின் ஓரங்கமாக இருந்தவர்கள். அது யாவருக்கும் தெரியும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் இருக்க அனுமதிக்கப்படாமலிருப்பதை பார்ப்பதே எமது முழுமுயற்சியுமாகும். அதனைப் பார்க்க நாம் விரும்புகிறோம்.