* ஐ.தே.க. அரசிடம் கேள்வி
எம்.ஏ.எம்.நிலாம்
எந்தச் சட்டத்தின் அடிப்படையில் பிள்ளையான் குழுவுக்கு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதக் குழுக்களை நடமாடவிட்டு ஜனநாயக ரீதியில் நேர்மையான தேர்தலை கிழக்கு மக்களால் எதிர்பார்க்க முடியுமாவென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அரசியலமைப்பு விதிகளை புறக்கணித்து சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருவதாகவும் ஐ.தே.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தி யாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்ட போதிலும் அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டது. அதேசமயம் கிழக்கின் இன்றைய பிரதான ஆயுதக் குழுவான பிள்ளையான் குழுவோடு கைகோர்த்துக் கொண்டு ஆளும் தரப்பு கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றது. பொலிஸ், இராணுவப் படைகளுக்கு அப்பால் இன்னொரு ஆயுதக் குழு சட்டரீதியற்ற முறையில் செயற்பட அரசு துணை போயிருப்பதன் மூலம் நேர்மையான தேர்தலொன்று இடம்பெறுமாவென்ற பலத்த சந்தேகம் இன்று தோன்றியுள்ளது.
ஆயுதக் கலாசாரத்தினூடாக மாகாண அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மறைமுகமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி தேர்தல் நடத்தப்படுவதாக அரசு கூறுமானால் சட்டபூர்வமற்ற ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். அதனை மதிக்காமல் அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸாரும் இராணுவம் உட்பட முப்படைகளும் மட்டுமே ஆயுதமேந்தும் அதிகாரம் பெற்றிருப்பவை. வேறு எவருக்கும் அனுமதியின்றி தன்னிச்சையாக ஆயுதங்களைப் பயன்படுத்தவோ ஆயுதங்களுடன் நடமாடவோ முடியாது. ஆனால், அரசு பிள்ளையான் குழுவை ஆயுதங்களுடன் நடமாடவிட்டிருப்பதன் மூலம் தேர்தலில் அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துவிடவும் வாக்குகளை அபகரிப்பதற்குமான மறைமுக நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
இத்தகைய முறைகேடான நடவடிக்கைகளுக்காகவே சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதை அரசு தாமதப்படுத்தி வருகின்றது. சுயாதீன தேர்தல் குழுவொன்று அமைக்கப்பட்டால் பொலிஸ், படைத்தரப்பு உட்பட அனைத்து விடயங்களையும் கட்டுப்படுத்தும் பூரண அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு கிட்டும் என்பதை நன்கு அறிந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இதனைத் தாமதப்படுத்தி வருகின்றார்" எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.