*ஐ.நா.சாசனம் மீறப்படுவதாக புலிகள் விசனம்
கிறிஸ்தவ மக்களின் புனிதத் தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது படையினர் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு ஒரு போர்ப்பூமியாக மாற்றி வருவதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
போர் மரபுகளின் படியும் ஐ.நா. சாசனங்களுக்கு அமைவாகவும் போர் செய்யாது தவிர்க்கப்பட வேண்டிய இந்தப்பகுதி மீது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தனது இராணுவத்தை ஏவிவிட்டிருக்கும் இலங்கை அரசின் இச்செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் பாதுகாப்பிடமாக இருந்துவரும் மடு புனித ஆலயப்பகுதியைப் போர்க்களமாக மாற்றியுள்ள அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமானது.
1999 இல் மடு ஆலயப் பகுதிக்குள் நுழைந்த படைகள் தனது போர்த் தாங்கிகள் மூலம் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஆலய மண்டபத்துக்குள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், முதியோர்கள் , பெண்கள் உட்பட 30 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதேபோன்று கடந்த 29.02.2008 அன்று மடு புனித வளாகப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளிச் சிறார்களின் பேருந்து மீது படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பள்ளிச்சிறார்களும் பொதுமக்களுமாக 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்து வரும் படைகள் அந்த மக்கள் மீது மீண்டும் ஒரு அவலத்தை சுமத்தியுள்ளது. முன்னரைப்போன்று இப்போதும் மடு புனித தலப்பகுதியை ஒரு இராணுவ வலயமாக்க அரசு முனைகின்றது.
பௌத்த மக்களின் மன அமைதி குறித்தும் பௌத்த மத தலங்களின் புனிதம் குறித்தும் அக்கறை செலுத்தும் இலங்கை அரசு, ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களின் அமைதியையும் புனிதத்தையும் புறந்தள்ளி விட்டு தனது இராணுவ நலனை முன்னிறுத்தி செயற்படுவதனைக் கண்டிக்க அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் முன் வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.