வன்முறையற்ற தேசம் குறித்து மேற்குலகு இலங்கைக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லையென சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி.சில்வா தெரிவித்தார்.
கொழும்பு கொண்டினென்டல் ஹோட்டலில் நேற்று வெள்ளிக் கிழமை வன்முறை மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;
2 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னமே எமது பாரம்பரிய சமயங்களில் வன்முறையற்ற உலகம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்கர்கள் செவ்விந்தியர்களுக்கு இழைத்த கொடுமையையும், அவுஸ்திரேலியர்கள் பழங்குடியினருக்கு இழைத்த கொடுமையினையும் நாம் மறந்து விடவில்லை.
எனவே வன்முறையற்ற தேசம் குறித்து மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு போதிக்க வேண்டிய அவசியமே கிடையாது. மனித உரிமை, மற்றும் வன்முறை ஒரு நாட்டினால் மற்றுமொரு நாட்டின் மீது திணிக்கப்படுவது வழமையாகிவிட்டது.
வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒஸாமா பின்லேடன் ஆகியோருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கப்படுவது அவசியம். அவர்கள் பல விடயங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சிகிச்சையளிப்பு மூலம் அவர்கள் வன்முறையை கைவிடுவது முழு உலகிற்கும் சிறந்தது.
இவ்வாறே மக்களின் பணத்தில் படித்து உயர்நிலையை அடைந்த பலர் தாய் நாட்டை மறந்த நிலையில் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். இவர்களுக்கும் மனநல சிகிச்சை அவசியமாகும். மக்களின் துன்பத்தை கவனத்திற்கொள்ளாது வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்போருக்கு சிகிச்சையளிக்கப்படுவது அவசியம்.
இதேவேளை, அடுத்த வருடத்திலிருந்து பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல விதிக்கப்படவுள்ள தடையானது சிறுவர்களுக்கெதிரான வன்முறையை குறைக்க உதவுமென அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.
இந்நிகழ்வில் உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி அகஸ்டினா போரா உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.