எம்.ஏ.எம்.நிலாம்
ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்றக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அக்கட்சியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்றுக் கூடிய ஜே.வி.பி.யின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமையவே அவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக ஜே.வி.பி.க்குள் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் குறித்து மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது. வீரவன்சவின் கருத்துகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவருமான லால்காந்தவும் கட்சியின் உயர் மட்டத்தைச் சேர்ந்த பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சமீபத்தில் பிள்ளையான் குழுவின் ஆயுதப்பாவனை குறித்து விமல் வீரவன்ச தெரிவித்த கூற்றுக்கள் ஜே.வி.பி.க்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன் ஜே.வி.பி. அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வீரவன்ச அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மறைமுகமாகச் செயற்பட்டமையும் ஜே.வி.பி. உயர் மட்டத்தை சினம் கொள்ளச் செய்திருந்தது.
இந்த நிலையிலேதான் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டத்தில் வீரவன்சவின் செயற்பாடுகள் தொடர்பாக நீண்ட நேரம் ஆராய்ந்ததன் பின்னர் அவரைக் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தம் செய்வதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் விமல் வீரவன்ச கலந்துகொள்ளாத நிலையிலேயே கட்சி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக விமல் வீரவன்சவும் ஏற்கனவே கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நந்தனகுணதிலக்கவும் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளதாகவும் இருவரும் தொடர்ந்து அரசுக்கு பக்க பலமாக இருந்து செயற்படத் தீர்மானித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.