கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தில் அரசு வெற்றி வாகை சூடியதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது புலிகள் இயக்கத்திலிருந்து கருணா குழுவினர் பிரிந்து சென்றதே ஆகும். அவ்வாறு புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருக்காவிட்டால் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையேயான யுத்தம் இத்தனை விரைவில் முடிந்திருக்க முடியாது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது கிழக்கில் கருணா பிளவு, கருணா குழு ஆதரவு ஆகிய காரணங்களால் அரசு விரைவாக வெற்றி பெற்றது போல் வடக்கில் புலிகளை அத்தனை துரிதமாகத் தோற்கடித்து வடக்குப் பிராந்தியங்களைக் குறிப்பாகப் புலிகள் இயக்கத்தின் பலப்பிரதேசமான வன்னியைக் கைப்பற்றுவது முடியாத காரியமாகும். இது சாதாரணமாக எவருக்கும் தெரிந்திருக்கும் உண்மையாகும். ஆனால் இந்த சாதாரண யதார்த்தத்தைக் கூட அரசாங்கம் உணர்ந்து கொள்ளவில்லை.
கிழக்குபோல் வடக்கிலும் புலிகள் இயக்கத்தினரை விரைவாகத் தோற்கடித்து "வடக்கு வெற்றி" யையும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையிலும் குறுகிய காலத்துக்கே யுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பிலும் அரசாங்கம் வடக்கில் தீவிர யுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்து எல்லை கடந்த வகையில் யுத்தத்திற்காகச் செலவிட்டு வருகிறது. இதற்கு முன் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றிபெறமுடியாமல் போனதுக்குக் காரணம் அந்தச் சமகால அரசு உண்மையில் புலிகளுக்கு எதிரான அதிதீவிரமான யுத்தத்தைச் செய்யாததே என்பதும் அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது. அனைத்து சக்திகளையும் திரட்டி புலிகள் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டால் விரைவில் அவர்களை வென்றுவிடலாம் என்றும் இந்த இனப் பிரச்சினையை துரிதமாக முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் எனவும் உறுதியான எதிர்பார்ப்புடனும் தீர்மானத்துடனும் ஆட்சியாளர்கள் செயற் படுகிறார்கள்.
இதேவேளை, இனப்பிரச்சினையின் அரசியல் பக்கத்தைப் பற்றி கவனம் செலுத்தாமல் யுத்தத்தின் பக்கம் மட்டுமே கவனம் செலுத்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டு அரசு செயற்படுவதன் பிரதி பலனாக பல்வேறு சர்வதேச பிரச்சினைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகம்கொடுத்துவிட்டது. பெருந்தொகையான சர்வதேச நிதிஉதவிகளை அரசு இழந்துள்ளது. ஆனால், இந்தப் பாதகமான எந்த விளைவுகள் பற்றியும் அரசாங்கம் பெரிதாகச் சிந்திக்கவில்லை. அவற்றைப் பாரதூரமானவை என அரசு உணர்ந்துகொள்ளவில்லை.
தற்போது பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக தெற்கில் மக்கள் பெரும் வேதனைகளுக்குள்ளாகி வாழ்கின்றனர். மக்களில் பெரும்பாலோரும் மட்டுப்படுத்தப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் கீழ்மட்ட இடைமட்ட மக்கள் வர்க்கத்தினரே ஆவர். தற்போது தொடர்ந்து உச் சத்தை நோக்கிச் செல்லும் வாழ்க்கைச் செலவுகளுக்கு முகம் கொடுத்திருக்கும் அவர்கள் இந்த நிலையில் உயிர் வாழவேண்டுமென்றால் ஒன்றில் தமது உணவுப்பாவனையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது திருடவோ, மோசடிகளைச் செய்தோ தமது வாழ்க்கையை நடத்த வேண்டும். அப்படியாக உணவில்லாமை சமூகக் குற்றச்செயல்கள் இன்று சமூகத்தில் அதிகமாகிவிட்டதை எம்மால் காணமுடிகிறது. இவ்வாறு பட்டினி, குற்றச்செயல்கள் இரண்டும் நாட்டின் எதிர்காலத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் காரணிகளாகும்.
லங்காதீப விமர்சனப் பகுதி :2.4.2008