ஐக்கிய அமெரிக்கா இதுகாலவரை ஷ்ரீலங்காவுக்கு யுத்தத்திற்காக வழங்கி வந்த இராணுவ மற்றும் நிதி உதவிகளை அண்மையில் பெருமளவு குறைத்துக் கொண்டும் குறிப்பிட்ட ஆயுத உதவிகள் நிதி உதவிகளை முற்றாக இடைநிறுத்தியும் உள்ளது. இவ்வாறு அமெரிக்கா ஷ்ரீலங்காவுக்கான உதவிகளை நிறுத்தியதற்குக் காரணம் ஷ்ரீலங்காவில் நிலவும் மனித உரிமைமீறல் நிலை என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்கு இவ்வாறு தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்குக் காரணம் ஈராக் யுத்தத்திற்காக அமெரிக்க அரசு பில்லியன் டொலர் கணக்கில் செலவிட்டு வருவதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் இதுவரை 3 பில்லியன் டொலர் தொகைக்கு மேற்பட்ட பணத்தை அமெரிக்க அரசு ஈராக்கில் மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டு விட்டதெனவும் இதில் குறிப்பிட்ட தொகை கடன் மூலமே பெறப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தொடர்ந்தும் அமெரிக்க அரசு ஈராக் யுத்தத்துக்காகச் செலவிடக்கூடிய பொருளாதார ஏற்பாடுகள் இருப்பினும் ஈராக் யுத்த செலவும் அதிகமான கடன்களும் குறிப்பிட்ட நிதி எல்லையைக் கடந்து விட்டதாக மேலும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நிதிவரவுக்கேற்ற செலவின் எல்லையைக் கடந்து விட்டதாலேயே இவ்வாறு அமெரிக்க அரசு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. மேலும், யுத்தங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியை அமெரிக்க அரசால் தவிர்த்துக் கொள்ளவோ அல்லது அதற்கான பொருளாதார நிவாரணத்தைப் பெறவோ முடியாது.
இதனை யுத்தக் கொள்கை காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தலைவிதியெனவும் இதை மாற்றுவது சாத்தியமான காரியமாக இருக்காது எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஒப்பான ஒரு நிலையிலேயே ஷ்ரீலங்காவும் உள்ளது. நாலாவது ஈழப்போரைத் தீவிரமாக அரசு நடத்திவரும் நிலையில் இன்னும் சில வருடங்கள் யுத்தத்தை அரசு முன்னெடுத்துச் செல்லுமானால் ஷ்ரீலங்காவுக்கும் அமெரிக்காவின் நிலையே ஏற்படுமெனவும் இந்தவகையில் செல்வந்த நாடாகிய அமெரிக்காவுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியை விட அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற தரத்தில் பார்த்தாலும் ஷ்ரீலங்காவுக்கு ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடி ஈடுசெய்ய முடியாததாகவே அமையலாம்.
லங்காதீப விமர்சனப்பகுதி: 2.4.2008