இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
ஆமதாபாத் ஆடுகளத்தில் லேசாக புல் காணப்பட்டது. இது வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இதனைக் கணிக்கத் தவறிய கும்பிளே நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன் விளைவு நான்காவது ஓவரிலே தெளிவாகத் தெரிந்தது.
முதல் டெஸ்டில் 213 ஓட்டங்கள் குவித்து அசத்திய ஜாபர், சேவாக் ஜோடியை இம்முறை தென்னாபிரிக்காவின் நிற்னி எளிதாகப் பிரித்தார். தென்னாபிரிக்க அணியில் புயல் வேகப் பந்து வீச்சாளர்கள் இருப்பதை கொஞ்சமும் யோசித்துப் பார்க்கவில்லை. இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்ரைன், நிற்னி விக்கெட் வேட்டையில் இறங்கினர்.
அதேபோல், இந்திய அணியின் பலம் துடுப்பாட்டம் என்பதையும் இவர் மறந்துவிட்டார். சச்சினுக்கு பதிலாக துடுப்பாட்ட வீரரையே தேர்வு செய்திருக்க வேண்டும். ஏழு துடுப்பாட்ட வீரர்களுக்குப் பதிலாக ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது எதிர்மாறான பலனைத் தந்துள்ளது.
நேற்று முன்தினம் தென்னாபிரிக்காவின் ஸ்ரைன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆவது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார். 23 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இவர் இந்தியாவுடனான போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். நான்கு இந்திய வீரர்கள் `டக்' அவுட்டானார்கள். தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நான்கு இந்திய வீரர்கள் `டக்' அவுட்டாவது இதுவே முதல் முறை.
நேற்று முன்தினம் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆறுதல் அளித்தார். இதன் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் பிஷன் சிங் பேடியை (266) முந்தி மூன்றாவது இடம் பிடித்தார். இவர் இதுவரை 65 டெஸ்டில் 267 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதலிரண்டு இடத்தில் கும்பிளே (607), கபில் (434) இருக்கின்றனர்.
இந்திய வீரர்கள் ஒரு போட்டியில் விளையாடினால், அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார்கள். சென்னையில் கலக்கிய இவர்கள் ஆமதாபாத்தில் ஆட்டம் கண்டார்கள். `ருவென்ரி-20' சாம்பியனான இந்தியர்களால் நேற்று முன்தினம் 20 ஓவர்கள் கூட முழுமையாக நிலைத்து நிற்க முடியவில்லை. விரைவில் சுருண்டு இந்திய மண்ணில் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆட்டமிழந்த முதல் அணி என்ற வேதனையான சாதனையைப் படைத்தது. இந்திய மண்ணில் மிக குறைந்த பந்தில் (120) ஆட்டமிழந்த அணி என்ற சோகத்தையும் தன்வசம் சேர்த்துக் கொண்டது.
ஆமதாபாத் ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது. துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வில்லை என இந்திய வீரர் ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் கறுப்பு நாட்களில் இதுவும் ஒன்று. ஆடுகளத்தை யாரும் குறைசொல்ல முடியாது. அது துடுப்பாட்டத்திற்கு ஓரளவு சாதகமாக இருந்தது. என்றாலும், வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இன்று தென்னாபிரிக்க வீரர்களை விரைவில் வெளியேற்ற வேண்டியது அவசியம். பின்னர் இரண்டாவது இனிங்ஸில் அதிக ஓட்டங்களை எடுத்து தென்னாபிரிக்காவுக்கு சவாலளிக்கலாமென்றார்.
விரைவாக 2 விக்கெட் விழுந்தவுடன், இந்திய வீரர்கள் பயந்துவிட்டதாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரைன் தெரிவித்துள்ளார்.