அக்தருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகாலத் தடை சரியானது தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் 5 ஆண்டு காலம் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சிபாரிசை ஏற்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அக்தருக்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று முன்னாள் வீரர்கள் உட்பட பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அக்தருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் முனீர் ஹபீஸ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;
அக்தருக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. ஒழுங்கீனமாக செயல்படக்கூடாது. தொழில் நியதியை மீறக்கூடாது என்று அக்தருக்கு நீண்டகாலமாக வாய்ப்பளிக்கப்பட்டது. அதனை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் இந்த முடிவை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக அக்தர் அணியின் நியதியையும், ஒழுக்கத்தையும் மீறி செயல்பட்டார். கிரிக்கெட் சபைக்குச் சவாலாகவும், அணி நிர்வாகத்துக்கு பணியாமலும் செயல்பட்டு வருகிறார்.
அக்தர் பலமுறை உடல் தகுதி பிரச்சினையில் சிக்கியுள்ளார். பல போட்டிகள் மற்றும் சுற்றுப் பயணத்தில் பாதியில் இடையூறு செய்துள்ளார். கிரிக்கெட் சபையின் கொள்கைகளுக்கு எதிராக அறிக்கை விட்டதால் மட்டும் அவருக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதுபோல் பல விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆசிப்பை தாக்கியதால் விதிக்கப்பட்ட 13 போட்டிகள் தடையிலிருந்து மீண்டு வந்த அக்தருக்கு 2 ஆண்டு நன்னடத்தை காலம் கொடுக்கப்பட்டது. அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டது உண்மைதான். மற்ற வீரர்கள் எல்லோருக்கும் அக்தர் ஒரு தவறான உதாரணமாக விளங்கினார். அவர் அணியில் எதிர்மறை ஆதிக்கம் செலுத்தினார்.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்காக எத்தனை போட்டிகளில் ஆடினார்? எத்தனை முறை உடல்தகுதி பிரச்சினையில் சிக்கினார், பந்தை சேதப்படுத்துதல், மோசமான நடத்தை, ஊக்க மருந்து சர்ச்சை, அதிகாரிகளை திட்டுதல், அணி வீரர்களுடனான வார்த்தை மோதல், சபை நிர்வாகத்துக்கு மதிப்பளிக்காமல் செயல்படுதல் ஆகிய எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுபட்டார். இது ஒரு தலைப்பட்சமான முடிவு அல்ல. நிர்வாகிகள் பலமுறை சிந்தித்து எடுத்த முடிவாகும். இந்திய பிரிமியர் லீக்கில் விளையாட அக்தருக்கு தடை விதிக்கப்படவில்லையென்றார்.