மேற்கிந்திய அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இலங்கை அணி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது.
இலங்கை- மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் வியாழக்கிழமை ரினிடாட்டில் ஆரம்பமானது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணித் தலைவர் கிறிஸ் கெயில், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய மைக்கல் வன்டொற் மற்றும் மலிந்த வர்ணபுர ஓரளவு சிறப்பாக ஆடினர். எனினும் மேற்கிந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு இவர்களை விரைவில் பிரித்தது.
இலங்கை அணி 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 35 ஓட்டங்களைப் பெற்றிருந்த வர்ணபுர எட்வேட்ஸின் பந்துவீச்சில் சற்றகூனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 38 பந்துகளை எதிர்கொண்ட இவர் 8 பவுண்டரிகளை அடித்தார்.
இதன்பின் களமிறங்கிய குமார் சங்ககார 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது எட்வேட்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ராம்டீனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 72.
இதன்பின் கப்டன் மஹேல ஜெயவர்த்தன களமிறங்கினார். இவ்வேளையில் அணி 93 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 30 ஓட்டங்களுடன் வன்டொற் ஆட்டமிழந்தார். இவரும் எட்வேட்ஸின் பந்துவீச்சில் ராம்டீனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் களமிறங்கிய திலான் சமரவீர 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ரெயிலரின் பந்துவீச்சில் கெயிலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 112.
இவரைத் தொடர்ந்து மஹேல ஜெயவர்த்தன 26 ஓட்டங்களுடன் ரெயிலரின் பந்துவீச்சில் போல்டானார். அப்போது அணி 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன்பின் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலகரட்ன டில்ஷானும் சில்வாவும் சிறப்பாக ஆடி நூறு ஓட்டங்களைப் இணைப்பாட்டமாக பெற்றிருந்தபோது மழை பெய்யவே முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அவ்வேளையில், இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டில்ஷான் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.