Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
சமஷ்டியை நோக்கி......
[06 - April - 2008] [Font Size - A - A - A]
ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்தையின் பின்னர் டிசம்பர் மாதம் ஆறாந் திகதி வெளிவந்த இலண்டன் டைம்ஸ் பத்திரிகை பின்வருமாறு எழுதியது - "சுமார் இருபது வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இலங்கையும் தமிழ்ப் புலிக்கிளர்ச்சியாளர்களும் பின்னையவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கும் வகையில் சமாதான ஏற்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். நேற்றைய தினம் ஒஸ்லோவில் நோர்வேயின் அனுசரணையுடன் நடந்த நான்கு நாள் பேச்சுக்களின் பின்னர் இரு தரப்பாரின் ஒருமித்த அறிவித்தலானது மேற்படி சுமுக இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியது. அவர்களின் முதல் வரைவு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது-"ஐக்கிய இலங்கையினுள் சமஷ்டி அடிப்படையில் உள்நாட்டுச் சுயாட்சி பெறும் வண்ணம்.அரசியல்த் தீர்வொன்று காணும் வகையில் ஆராய இரு தரப்பாரும் இணங்கியுள்ளனர்.இதற்கான அடிப்படை அரசியல் சாசன மாற்றத்தை ஏற்படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாதுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானத்துக்காகப் பேச்சுக்கள் நடத்துவேன் என்று கூறிப் பதவிக்கு வந்து சரியாக ஒரு வருடம் பூர்த்தியான தினத்தில் இந்த இணக்கப்பாடு இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜனாதிபதி குமாரதுங்க அடங்கிய அவரின் அரசியல் எதிர்ப்பாளர்கள் அவரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து கிளர்ச்சியாளர்களுக்கு அதிகம் கொடுக்க அவர் முன்வந்துள்ளார் என்று குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்."

தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், அவர்களுக்குப் பல இன்னல்கள் இழைக்கப்பட்டுள்ளன என்று கூறித்தான் சந்திரிக்கா 1994 இல் பதவிக்கு வந்தார். அவரின் பேச்சுக்கள் யாழ்ப்பாண மக்களைக் கவர்ந்ததால் சந்திரிக்கா படக் கலண்டர்கள் கூடப் பல யாழ் தமிழ் மக்களின் வீடுகளில் அக்கால கட்டத்தில் தொங்கின. ஏன் சந்திரிக்கா வளையல்கள் கூட விற்பனையாகின. கிறீஸ்தவரான அவரின் கணவர் சினிமா நடிகர் விஜயகுமாரணதுங்க தமிழர்களின் உரித்துக்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று திடமாகக் கூறி வந்ததால் சந்திரிக்காவை யாவரும் நம்பினர்.

ஆனால் பேச்சு வார்த்தை யானது தன்னால் ஏற்படுத்தப்படாது ஐக்கிய தேசியக் கட்சியின் முனைப்பால் ஏற்பட்டதால் அவரின் பல்லவி மாறியது. கிளர்ச்சியாளர்களுக்கு அதிகம் கொடுத்து விடக் கூடாது என்பதே அந்தப் பல்லவியின் சாராம்சம். அதே பல்லவியைத் தான் இன்றைய ஜனாதிபதியும் பாடுகிறார். கிளர்ச்சியாளர்களை ஒழிப்போம்,சமாதானத்தை ஏற்படுத்துவோம் என்கிறார். கிளர்ச்சியாளர்கள் இருக்கும் போது சமாதானத்திற்கு வித்திடாதவர்கள் அவர்கள் அழிந்த பின், அவர்கள் ஒழிக்கப்பட்ட பின் எந்தவித சமாதானத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை பதின்மூன்றாவது திருத்தம் பரம திருப்தி அளிக்குமே என்ற பறைசாற்றலை வைத்து எவருமே புரிந்து வைத்துள்ளார்கள். கிளர்ச்சியை ஒழி, பயங்கரவாதத்தை ஒழி என்பவர்கள் உரித்துக்கள் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்த் தான் அதனைச் செய்கிறார்கள் என்பதை முதலில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்ப்பை அழித்து வந்த சமாதானத்தால் பயன் அடையப் போகின்றவர்கள் அரசாங்க அடிவருடிகளேயன்றி இலங்கைத் தமிழ்ப் பேசுஞ் சமுதாயம் அல்ல. ஓரிரு மழைக் குருவிகள் மழைக்கறிகுறியாக அமையமாட்டா? தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழர் கோரிய உரிமைகளைக் கேட்டபோது கொடுத்ததாகச் சரித்திரம் இல்லை. குறைத்து குறைத்து அரை குறையாகவே கொடுக்க முன்வந்துள்ளார்கள். ஆறு வயதில் சிறுமிகேட்ட சட்டையைப் பதினாறு வயதில் " இந்தா உன் சட்டை" என்று கொடுக்கப் பார்க்கிறார்கள். ஆறுவயதுச் சிறுமியின் சட்டை பதினாறு வயதில் அவளுக்குப் பொருந்துமா என்று சிந்திப்பதில்லை அரசாங்கங்கள். ஆனால் அடிவருடிகள் (வேறுவழியின்றி) வெட்டித் தைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். கூடிய சீலை இல்லாது, தேவைப் பொருட்கள் இல்லாது எப்படி வெட்டித்தைப்பது? அப்படி வெட்டித் தைத்த சட்டை அடிவடிருகளுக்குப் பொருந்தக் கூடும். வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு? அண்மையில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் சந்திரிக்கா அம்மையார் 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கங்காலந் தப்பி அளிக்கப்படுங் காரியம் என்றார்.

இரு தோட்டத்தில் வேலை செய்தவர்கள் கூடிய சம்பளம் கேட்டுகிளர்ச்சி பண்ணினார்கள். செய்யாத குற்றங்களுக்காக அவர்களைச் சிறையில் வாட ஏற்பாடு செய்தார் தோட்டச் சொந்தக்காரர்.அதன் பின் அந்த வேலையாட்களைப் பொய் வழக்கில் மாட்டி விட அவருக்குப் பக்க பலமாக இருந்த சில அடியாட்களுக்குத் தன் தோட்டத்தில் வேலை கொடுத்தார். முதலில் நல்ல விதமாக அவர் அவர்களைக் கவனித்துக் கொண்டார். சில மாதங்களிலேயே முன்னைய தொழிலாளர்களுக்குக் கிடைத்த சம்பளத்திலும் பார்க்கக் குறைவாகவே இந்தப் புதிய வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்கத் தொடங்கினார். புதிய வேலையாட்கள் கிளர்ச்சி பண்ண முடியவில்லை. காரணம் அவர்களின் குற்றங்கள், குறைகள், அடாவடித்தனம் பற்றியெல்லாந் தோட்ட முதலாளி அறிந்து வைத்திருந்தார். "மூச்சு விட்டால் முடித்து விடுவேன் உங்கள் கதையை" என்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து இன்றைய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு பிரிவினர் ஐந்து வருடங்களுக்குத் தேர்தல் நடத்த மாட்டோம் என்று ஜனாதிபதியின் சகோதரர் கூறியதால்த் தான் தமது கட்சியை விட்டு விலகி வந்தார்கள். இன்று இருக்கும் நிலையில் ஒரு வேளை தேர்தல் உடனேயே நடத்த வேண்டிவரும் என்ற ஒரு கட்டம் எழுந்துள்ளது. அது எப்படி என்று பிரிந்து வந்தோர் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி "அவர்கள் இனி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் சேர்ந்தவர்கள். பேசாமல் எங்கள் கட்சி சார்பில் தேர்தல்களில் நிற்கச் சொல்லு" என்று ஜனாதிபதி தமது சகோதரனிடம் கூறினாராம். எங்கே அவர்களின் தனித்துவம்? அடங்கிப்போய் விட வேண்டியது தான்! ஆகவே சேர்ந்து போனால் சிறப்புண்டு என்று எண்ணுபவர்கள் தம் எதிர்காலம் பற்றிச் சற்று நிதானமாகச் சிந்தித்தால் நன்று. தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க உறுதுணையாக இருப்பவர்கள், இன்று அவர்கள் துணைநிற்கும் அதே அரசியல்வாதிகளாலும் பெருவாரியான தமிழ்ப் பேசும் மக்களாலும் ஒரு காலத்தில் உதாசீனப்படுத்தப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைக் கண்ட அனுபவத்தில் வயது முதிர்ந்த கவீரன் இதைச் சொல்லி வைக்கிறான். இவற்றைக் கூறுவது சிலருக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். சினத்தை மூட்டலாம்.ஆனால் வாழ்க்கை ஒரு தொடர் கதை என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது. இன்றைய எனது சுயநலகருமங்கள் நாளை எனது முழு இனத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடாது. ஓலைத்தூக்கை ஓவிவிட்டு ஒதுங்கி இருப்பது நல்லதென்பதை நாங்கள் உணர வேண்டும். கர்மம் அதன் கருமத்தைச் செய்ய முன்னமே இது பற்றி நாங்கள் சிந்திப்பது நன்மை தரும்.

பலர் இன்று எதிரியைக் கொன்று குவித்தால் பிரச்சினைகளுக்கு அது தீர்வாகும் என்று எண்ணுகிறார்கள். அது அப்படியல்ல. ஒரு மரத்தின் கிளைகளை வெட்டினால் அது இன்னுஞ் சிறப்பாக வளரும். ஆழப்புகுந்தே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். ஆளை வெட்டியல்ல .ஈராக்கில் வெட்டி பார்த்தார்கள், இன்னும் பல நாடுகளில் ஆளை வெட்டி அரசியல் ஆதாயம் பெறலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவ்வாறு நடக்கவும் நடக்காது. புதிய பிரச்சினைகள் தலை தூக்குமே ஒளிய எதிரிகளை வெட்டிப் போட்டு வெற்றியை எதிர்பார்ப்பது மூடத்தனம். இது சகலருக்கும் பொருந்தும். இரஜீவ்காந்தி,நீலன் திருச்செல்வம் என்று வெற்றியை நாடி ஒரு சாராரால் வெட்டிப் போடப்பட்டவர்கள் இன்னும் எங்களுக்குப் பிரச்சினைகளை இறந்துந் தந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். போருக்காகப் போட்டுத் தள்ளுவது போர்த் தர்மம். பொறுக்காமல் அல்லது பொறாமையால் போட்டுத் தள்ளுவது சுயநலம்; இதையெல்லாந் தமிழ்பேசுஞ் சமுதாயம் மறக்கக் கூடாது.

மற்றவை அடுத்த வாரம்.

Email this page Your Opinion Print this page
மடுவை படையினர் கைப்பற்றுவார்களா?
சமஷ்டியை நோக்கி......
கிழக்கு மாகாண தேர்தலும் அரசாங்கத்தின் உபாயங்களும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com