Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
அன்பான தமிழ் பேசும் மக்களுக்கு...
[06 - April - 2008] [Font Size - A - A - A]
தினக்குரல் இன்று அதன் 12 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறது. கடந்த 11 வருடங்களிலும் சமுதாய நலனுக்காகவும் நலமார்ந்த இதழியலின் மேம்பாட்டுக்காகவும் தினக்குரல் செய்துவந்திருக்கும் பங்களிப்பு குறுகியதொரு காலகட்டத்திற்குள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதொரு நாளேடாக அதை மிளிரவைத்திருக்கிறது.

முன்னைய காலங்களைப் போலன்றி மிகவும் கூடுதலான அளவுக்கு அரசியல் பிரச்சினைகளை முனைப்புறுத்த வேண்டிய சமகாலத் தேவை காரணமாக இதழியல்துறை இன்று எதிர்நோக்கவேண்டியிருக்கும் சகல விதமான நெருக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் தினக்குரல் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்திருப்பதை எமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் இன்னொரு தமிழ்ப் பத்திரிகை என்ற நிலையிலிருந்து இன்று தினக்குரல் தேசிய இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் சகலதையும் பூர்த்திசெய்யக்கூடிய பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியத்தை துணிச்சலுடன் வலியுறுத்தும் ஒரு பத்திரிகையாக மாறியிருக்கிறது.

ஏனைய சிறுபான்மை இனங்களின் நலன்களுக்கு குந்தகமில்லாத வகையில் தமிழ்க் கருத்துக்கோணத்தை, தமிழ்த் தேசிய அரசியலின் கருத்து நிலையை வெளிப்படையாகத் துணிவாற்றலுடன் முன்வைக்க வேண்டிய காலத்தின் தேவைக்கு ஈடுகொடுக்கும் பணியை தினக்குரல் அதன் ஆரம்பம் முதலிருந்தே அர்ப்பணிப்புடன் செய்துவந்திருக்கிறது.

எந்தவொரு அரசியல் இயக்க நிலையிலும் இருந்து அல்லாமல் தமிழ்த் தேசியத்தின் நியாயபூர்வமான கோரிக்கைகளை உரத்துப் பிரசாரப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை கொழும்பை மையமாகக் கொண்ட ஏனைய தமிழ் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது தினக்குரலின் வரவேயாகும்.

தமிழ்த் தேசியத்துக்கான பங்களிப்புப் பரப்பெல்லைக்குள் ஏனைய சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காகவும் குரல்கொடுக்கும் பணியில் தினக்குரல் சமநிலை தவறியதில்லை.

செய்தி எடுத்துரைப்பில் அறிவியல் ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற நிதானத்தை விட வெறும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடக்கூடிய செயற்போக்கு இன்றைய ஊடகவியலாளர்கள் மத்தியில் வியாபகமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற போக்கை தடுத்து நிறுத்துவதென்பது நலமார்ந்த இதழியலுக்கு உண்மையில் ஒரு பாரதூரமான சவாலாகவே இருக்கிறது. இச்சவாலை எதிர்கொள்வதற்கு தினக்குரல் வெகு நிதானத்துடன் இயன்றவரை பாடுபட்டுவந்திருக்கிறது.

ஒரு குறுகிய காலகட்டமான 11 வருடங்களுக்குள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க ஒரு தினசரியென்று பெயரெடுத்த தினக்குரலின் வளர்ச்சி நாம் தூரதரிசனத்துடன் சமுதாயத்தின் நலன்களை முன்னிறுத்தி பிரச்சினைகளை அணுகியிருக்கிறோம் என்பதற்குத் தெளிவான சான்று.

இதழாசிரியப் பெறுமானங்களுக்கு (Editorial Values) முதன்மை கொடுக்க வேண்டுமென்பதில்நாம் காட்டிய உறுதிப்பாடு, தெளிவாக வரையறுக்கப்பட்ட பத்திரிகைத்துறை வீச்செல்லைக்குள் வாசகர்களினதும் சந்தையினதும் தேவைகள் தொடர்பில் நாம் காட்டிய பிரதிபலிப்பு ஆகியவை தினக்குரலின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு முக்கியமான காரணிகள்.

ஒரு செய்திப் பத்திரிகைக்கு நம்பகத்தன்மையைக் கொடுப்பதும் ஏனைய வர்த்தக உற்பத்திப் பொருட்கள் மற்றும் சரக்குகளில் இருந்து பத்திரிகையை வேறுபடுத்துவதும் ஆசிரியர் பீடத்தின் முதன்மையை வலியுறுத்தும் கோட்பாடுதான் (DOCTRINE OF EDITORIAL PRIMACY) என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாம்.

எந்தக் கட்டத்திலும் நம்பிக்கையீனம் எமது செயற்பாடுகளில் ஊடுருவுவதற்கு நாம் கிஞ்சித்தும் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் ஆரோக்கியமான அணுகுமுறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவோமென்று தமிழ் பேசும் மக்களுக்கு உறுதி கூறுகின்றோம்.

தினக்குரலின் வளர்ச்சிக்காக பாடுபட்டுழைத்த அனைவருக்கும் எமது நம்பிக்கைக்கு உரமூட்டிய தமிழ் பேசும் மக்களுக்கும் நன்றி கூறிக் கொண்டு அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்த்து மனத் தைரியத்துடன் அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com