* திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவிப்பு
கையடக்கத் தொலைபேசிகளில் பேசிக் கொண்டு வீதிகளில் நடமாடுவதனால் கடந்த காலங்களில் திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக அலவ்வ திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.டி.பி. சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
"கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு புகையிரதப் பாதையில் சென்று கொண்டிருந்தமையினால் வலக்கும்புர மற்றும் புஜ்ஜோவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இருவர் அலவ்வ பஸ் தரிப்பிடத்தில் மற்றும் துல்கிரியா போன்ற இடங்களில் திடீர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.
கையடக்கத் தொலைபேசியின் மூலம் பேசிக்கொண்டு வாகனங்கள் செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது போல் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதிகளை கடப்பவர்களை தடை செய்ய வேண்டியுள்ளது.
அநேகமான இளைஞர்கள் தொலைபேசியை தலைக்கவசத்திற்குள்ளே வைத்துக்கொண்டு அழைப்புகளுக்கு பதில் அளித்துக் கொண்டு உந்துருளிகளை செலுத்துவதும் திடீர் விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது" என்றும் தெரிவித்தார்.