யாழ்.குடாநாட்டில் கடந்த இரு வருடங்களில் 740 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளது தெரியவருகிறது.
இதேநேரம், மேலும் பலர் காணாமல் போயுள்ள அதேநேரம், அது குறித்து குடும்பத்தவர்களோ அல்லது உறவினர்களோ மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை.
அச்சம் காரணமாகவே பலர் இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பலர் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை தத்தமது பகுதி பொலிஸ் நிலையங்களில் மட்டுமே பதிவு செய்துள்ளதால் காணாமல்போனோர் தொடர்பான உண்மையான எண்ணிக்கை, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் மிக அதிகமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான இரு வருட காலத்திலேயே இந்த 740 பேரும் காணாமல்போனதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், இவ்வருடம் முதல் மூன்று மாதத்தில் யாழ். குடாநாட்டில் 27 பேர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 பேர் கடத்தப்பட்டதும் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 46 பேர் காணாமல்போனதுமே இந்தப் பட்டியலில் அதிகூடியோர் காணாமல்போன காலப்பகுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 40 பேர் காணாமல் போனதே அந்த ஆண்டில் மிகக் கூடியோர் காணாமல்போனதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.