அமந்த பெரேரா
இலங்கையில் தமிழ்ப் போராளிகளுக்கும் ஆயுதப் படையினருக்கும் இடையிலான யுத்தத்திலிருந்து தப்பிக் கொள்வதற்காக நாட்டின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் கடந்த ஒரு வருட காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் இரண்டு தடவைகள் சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
2006 ஆம் ஆண்டு பிற்பகுதியிலும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் ஆயுதப் படையினர் விடுதலைப் புலிப் போராளிகளை விரட்டுவதற்காக அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளுக்குள் பிரவேசித்த போது பீதியடைந்த மக்கள் அநேகமாக தமிழினத்தவர்கள் தங்கள் வீடு வாசல்களை விட்டுத் தப்பியோடினர். அரசாங்க படையினர் மேலும் மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றிய பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்கள் விட்டுச் சென்ற கிராமங்களுக்கு அழைத்து அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான திட்டங்களை பாரிய அளவில் ஆரம்பித்தனர்.
இதுவரை அரச படைகளினால் மீட்கப்பட்ட வவுணதீவு, வாகரை போன்ற இடங்களில் 104,000 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்களில் 18,000 க்கும் சிறிது அதிகமானோர் கடந்த வருடம் மார்ச் மாத நடுப்பகுதி வரை மீளக்குடியமர்த்தப்படாதிருந்தார்கள்.
மார்ச் மாதம் 10 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டின் சகல மாவட்டங்களிலும் அதன் அதிகாரம் நிலைநாட்டப்பட்டதை வலியுறுத்தியது.
எவ்வாறாயினும் பிரதான எதிர்க்கட்சிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பினால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் களங்கம் ஏற்பட்டது.
தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை வற்புறுத்தி வருகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். துப்பாக்கி ரவைகளிலிருந்தோ ஷெல் ஏவுகணைகளிலிருந்தோ நான் தப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி என்னால் சிந்திக்கவே முடியாதிருக்கிறது என்று வவுணதீவில் வயது வந்த மூன்று புதல்வியரின் தந்தையான (49 வயது) செல்லன் சுந்தரலிங்கம் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். வவுணதீவில் 27,000 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
பெருமளவிலானோர் சொந்த இடங்களுக்கு திரும்பிய போதிலும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்னமும் செய்து தரவில்லை என்று கிராமவாசிகள் கூறுகிறார்கள். முறையான வீதிகள், சீரான மின்சார விநியோகம், வீடமைப்பு, பாடசாலைகள், மருத்துவம் போன்ற வசதிகள் எதுவுமில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தார்கள். சீரழிந்த வீடு ஒன்றிலேயே தாம் இன்னமும் வசித்து வருவதாக சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
புகழ்பெற்ற மட்டக்களப்பு ஏரியின் மேற்குப் புறத்தில் பல தசாப்தங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மக்கள் புதிதாக குடியமர்த்தப்பட்ட இப்பகுதிகளில் உள்ள வீதிகள் ஷெல் தாக்குதலால் சேதமடைந்து குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றன. பாடசாலைக் கட்டிடங்களும் சேதமடைந்து கூரைகள், சுவர்கள் ஷெல் தாக்குதல்களால் இடிந்து நொருங்கியுள்ளன.
குமாரதாஸ் நேசமலர் என்பவர் தமக்குக் கிடைத்த 250,000 ரூபா (2318 அமெரிக்க டொலர்) கடல்கோள் நிவாரணப் பணத்தைக் கொண்டு தமது வீட்டைப் புனரமைக்க இருக்கிறார். கடல்கோள் தாக்கியதில் தமது வீடு அழிந்துவிட்டது என்றும் தம்மால் அதனை இதுவரை புனரமைக்க முடியாமல் போய்விட்டது என்றும் 5 பிள்ளைகளின் தந்தையான 38 வயதான குமாரசாமி தெரிவித்தார். தற்போது தமக்குக் கிடைத்த பணமும் யுத்தத்திலிருந்து தப்பி ஓடுவதில் செலவாகிவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வருடம் ஜுலை மாதத்திலிருந்து அமைதி நிலவுகின்ற போதிலும் புதிதாக குடியமர்த்தப்பட்டவர்களில் அநேகமானோர் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை துப்பாக்கி கலாசாரத்தில் கழித்ததன் தாக்கத்தை அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக யுத்தம் இல்லாததால் ஓரளவு நிம்மதியாக இருப்பதாக சுந்தரலிங்கம் தெரிவித்தார். நல்ல அறுவடை கிடைத்துள்ளது. மீன்பிடியும் அமைதியாக நடைபெறுகிறது. ஆனால் நாளை என்ன நடக்கும் என்று யார் அறிவார்? என்று அவர் ஏக்கத்துடன் கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வவுணதீவு, வாகரை, கரடியனாறு போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நினைவுக்கெட்டிய காலத்திலிருந்து தாங்கள் யுத்தத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
பல தடவைகள் தங்கள் வீடுவாசல்களை விட்டு ஓடி மீண்டும் திரும்பியதாக தெரிவித்த சுந்தரலிங்கம், இதுவே தங்கள் வேலையாகிவிட்டது என்றும் கூறினார்.
உண்மையில், அண்மைக் காலத்துடன் ஒப்பிடுகையில் கடைசியாக கிடைத்த நெல் அறுவடை மிக அதிகமானதாகும். இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்தமையும் நெல் அறுவடை இலாபம் தருவதற்கு ஒரு காரணமாகும். வாகரை போன்ற இடங்களில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மீன்பிடி இடம்பெறாததால் தற்போது அப்பகுதியில் நல்ல மீன் கிடைக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் துரிதகதியில் அபிவிருத்தித் திட்டங்கள் அமுல் செய்யப்படுமென்று ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்தது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல் செய்வதற்காக மார்ச் மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற பதவிப்பிரமாண வைபவத்தின் போது தலா 2.5 மில்லியன் ரூபாவை (23.000 அமெரிக்க டொலர்) ஜனாதிபதி வழங்கினார்.
ஆனால், தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்களில் வவுணதீவுக்கு தெற்கே இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் மூன்று சிவிலியன்கள் உட்பட மேலும் 5 பேரும் கிளைமோர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் விசேட பதிவு நடவடிக்கை ஒன்றையடுத்து விசேட அடையாள அட்டையும் வழங்கப்பட்ட பின்னர் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள். வெளியார் அந்தப்பகுதிகளில் இன்னமும் சுதந்திரமாக நடமாட முடியாதிருக்கிறது. அப்பகுதிகளில் பணியாற்றும் ஐக்கியநாடுகள் மற்றும் நிவாரண அமைப்புகள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன.
அரசாங்கம் நடத்தவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் முடியும் வரையாயினும் அபிவிருத்தித் திட்டங்கள் தடைப்படுமென நம்பப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் அரசாங்கம் மிக சுலபமாக நடத்தி முடித்துவிடும். கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும்.
தேர்தலில் யார் வென்றாலும் இதுவரை பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளான மக்கள் அமைதியானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கையையே விரும்புகிறார்கள். பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் வாழும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்துக் கவனம் செலுத்தப்படுகிறது.
வவுணதீவில் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவரும் 14 வயதான மதனராஜா தாம் தினமும் பாடசாலைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறுகிறார். பாடசாலை மைதானத்தில் பயமின்றி விளையாடலாம் என்று இம்மாணவன் கூறுகிறார்.
நன்றாக படித்து ஒரு பொறியியலாளராக வரவேண்டுமென மதனராஜா விரும்புகிறார். சீரழிந்த வீதிகளையும் சேமடைந்த வீடுகளையும் பார்த்துக் கொண்டு பேசிய மதனராஜா தாம் மக்களுக்கு உதவ வேண்டுமெனக் கூறினார். ஆனால் இவரது பாடசாலையில் பாடநூல்கள் போன்ற அடிப்படை தேவைகள் பல இல்லாதிருக்கின்றன. இவருக்கு விரைவில் பாடநூல்கள் வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஐ.பி.எஸ்.