* திறைசேரியில் பணம் இல்லை
திறைசேரியில் நிதியின்மையால் பண்டிகைக்கால முற்பணத்தை அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரித்து வழங்க முடியாதென அரசு அறிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முற்பணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.
பொதுநிர்வாக அமைச்சில் 25 க்கும் மேற்பட்ட அரசதுறை தொழிற்சங்கங்களுக்கும், அமைச்சர் கரு ஜயசூரியவுக்குமிடையே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதன்போது தொழிற்சங்கங்கள் தற்போது வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் எனவே, பண்டிகைக்கால முற்பணம் அதிகரித்து வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இம்முற்பணத்தை தவணை அடிப்படையில் பின்னர் அரசாங்க ஊழியர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமெனவும் எனவே, உடனடியாக 3 ஆயிரம் ரூபா பண்டிகை முற்பணத்தை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளன.
எனினும் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் திறைசேரியில் நிதியில்லை எனவும் அதனால், அரசாங்க ஊழியர்களின் பண்டிகை முற்பணத்தை அதிகரித்து வழங்க முடியாதெனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விரக்தியுடன் வெளியேறியதாகக் குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிடும் போது;
அதிகரித்த முற்பணம் வழங்குவதாக அரசு ஆரம்பத்தில் எமக்கு வாக்குறுதி வழங்கியபோதும் பின்னர் ஏமாற்றிவிட்டது. எமக்கு முற்பணம் வழங்கிவிட்டுப் பின்னர் மாதாந்தம் எமது சம்பளத்தில் அதனைக் கழித்து விடுமாறும் கூறினோம். இதனைக் கூட ஏற்காத அரசு புது வருடத்தை நெருக்கடிக்கு மத்தியில் கொண்டாட எம்மை நிர்ப்பந்தித்துள்ளது என்றார்.