இனநெருக்கடிக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நேற்று சனிக்கிழமை பிரிட்டனுக்கு பயணமானது.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான இக்குழுவில் சர்வகட்சிப் பிரதிநிதிகளில் அநேகமானோர் இடம்பெற்றுள்ளனர்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இவ்விஜயத்தின்போது அயர்லாந்து பிரிட்டனின் வட அயர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.
அங்கு அந்நாடுகளின் ஆட்சிமுறை மத்திய மற்றும் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், சிறுபான்மை சமூகங்களுக்கான காப்பீடுகள், அரசியலமைப்பில் ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அவை இலங்கைக்கு பொருந்தும் விதம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்வர்.
மேலும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில், சமூக, சிறுபான்மை இனப் பிரதிநிதிகள், அரசியல் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுடனும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் சுமார் இரு வாரங்கள் அந்நாடுகளில் தங்கியிருந்து இக்கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதுடன் தமது பயணம் குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.