* மூடிமறைக்கிறது அரசு; ஐ.தே.க. செயலாளர் குற்றச்சாட்டு
கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 பேர் அங்கவீனர்களாகியும் படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காணாமல்போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசாங்கம் மூடிமறைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
கிழக்கை மீட்டுவிட்டோம், வடக்கைக் கைப்பற்றுகின்றோமென அரசு பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால், தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.
நிவித்திகலை தேர்தல் தொகுதிக்கு புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொருட்டு விசேட கூட்டமொன்று பனாவென்னவிலுள்ள காமினி அத்துக்கோரள தோட்டத்தில் நிவித்திகலை தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளரும் எம்.பி.யுமான திருமதி தலதா அத்துக்கோரளவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியதாவது;
"நாடு அதள பாதாளத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பகுதியில் தினம் தினம் தமிழ் மக்கள் கடத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். அச்சுறுத்தல்கள் விடப்படுவதும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
எங்கு பார்த்தாலும் கொலை யுகம். வீட்டிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் வீட்டுக்கு திரும்புவது நிச்சயமற்றதாகவே காணப்படுகின்றது.
யார் எப்போது எங்கு கொல்லப்படுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனினும், அரசுக்கெதிராக குரல் கொடுக்கும் அனைவரும் அச்சுறுத்தப்படுகின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர். இதுதான் இன்றைய யதார்த்தபூர்வமான நிலை.
வட,கிழக்கு பகுதிகளை மீட்டெடுத்ததாக அரசாங்கம் பறைசாற்றுகின்றது. எனினும், கதிர்காமம் மற்றும் புத்தல, யால பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. சென்றால் கொல்லப்படுவார்கள்.
அரசாங்கம் யுத்தம் குறித்து உண்மைத் தன்மையை கூறுவதில்லை. இதன் காரணமாக மக்கள் போர் குறித்து உண்மையான நிலை தெரியாது அல்லல்படுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 400 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் அங்கவீனர்களாக அல்லது படுகாயமடைந்துள்ளனர். 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினர்கள் காணாமல்போயுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொப்பிகல, மாவிலாறு உள்ளிட்ட பல இராணுவ வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இராணுவ மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார். தற்போது பனாகொடையிலிருந்து கொழும்புக்கு கடமைக்கு சென்று வருகின்றார். இவருக்கு புலிகளினால் கொலை அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு கொலை அச்சுறுத்தலுள்ள ஒரு இராணுவத்தளபதி மீது அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுவதில்லை.
கடந்த காலத்தில் இராணுவ மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவிற்கு அரசாங்கம் போதிய பாதுகாப்பு வழங்காத காரணத்தினால்தான் அவர் புலிகளால் கொலை செய்யப்பட்டார்.
புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு அரசாங்கமே வழிகோலியது. அதுபோல்தான் ரி. மகேஸ்வரன் எம்.பி.க்கும் அரசாங்கம் பாதுகாப்பினை குறைத்தது. தற்போது மு.கா. தலைவர் ஹக்கீமிற்கும் பாதுகாப்பினை குறைத்துள்ளது.
பிரபாகரனிடமிருந்து கிழக்கை மீட்க 1000 க்கு மேற்பட்ட இராணுவத்தினரை பலி எடுத்ததாக கூறும் அரசாங்கம், அவ்வாறு மீட்ட கிழக்கை தேர்தல் என்ற போர்வையில் பிரபாகரனின் தம்பியென கூறப்படும் பிள்ளையான் எனும் பயங்கரவாதியிடம் ஒப்படைத்துள்ளது.
1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கமே அதனை புலிகளிடம் வழங்கியது. தற்போது அப்பகுதியை மீட்டுவிட்டதாக பெருமை கொள்கின்றது.
ஆயுதக்குழு போட்டியிடும் ஒரு தேர்தலில் ஜனநாயக ரீதியாக செயற்படும் எந்தக் கட்சியும் போட்டியிடுவதில்லை. அதனால் தான் மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
எமது கோரிக்கையின் பின்னரே கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் எதுவும் போட்டியிடவில்லை. அதனால்தான், நாம் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். எமது வெற்றி நிச்சயம். இதன்பின்னர் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றி பெறும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு - செலவு திட்டத்தின்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லையென்பதற்காக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. ஜனநாயக ரீதியாக செயற்படும் இவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கலாமா?
கொலை, கொள்ளை, ஊழல் மோசடி மலிந்து போயுள்ளது. அரசாங்கம் சிறு சிறு தேர்தலை நடத்தி மக்களையும் உலகத்தையும் ஏமாற்றாமல் தைரியமிருந்தால் பொதுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும்" என்று சவால் விடுக்கிறோம்.