இலங்கைத் தீவிலுள்ள தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலிக்கும் `தினக்குரல்' தனது பயணத்தில் 11 வருடங்களைப் பூர்த்திசெய்து இன்று 12 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தினசரிப் பத்திரிகை ஒன்றின் வரலாற்றில் 12 வருடங்கள் என்பது மிகவும் குறுகியதுதான். இருந்த போதிலும் இந்தப் பன்னிரண்டு வருட காலத்துக்குள் தினக்குரல் இலங்கையிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களிலும் நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சமூகத்தில் தினக்குரலுக்கு ஸ்திரமான ஒரு இடம் கிடைத்துள்ளது.
`தினக்குரல்' ஒரு செய்திப் பத்திரிகையாக மட்டும் தனது பணியை முன்னெடுக்கவில்லை கல்வித்துறைக்காக தினக்குரல் ஆரம்பித்த இலவச இணைப்புகள், மாணவர் சமுதாயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் இவ்விடயத்தில் தினக்குரல் தான் முன்னோடி! மாணவர்களுடைய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதிலும் இதன் பங்கு அளப்பரியது.
அதேவேளையில் அரசியல், இராணுவ, பொருளாதார விடயங்களுடன், விஞ்ஞானம், கலை, இலக்கியம் என அனைத்து அம்சங்களையும் தாங்கிய ஒரு வார இதழாக ஞாயிறு தினக்குரல் வெளியிடப்படுகின்றது. அத்துடன் சுவாரஸ்யமான ஜனரஞ்சக அம்சங்களுடன் புதன் வசந்தம் வெளிவருகின்றது.
இவை அனைத்தும் இணைந்துதான் முக்கிய காலத்துக்குள் நிரந்தரமான ஒரு இடத்தை தினக்குரல் பெற்றுக் கொள்வதற்குக் காரணமாகியது.
மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவது, அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது என்பவற்றுடன், மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதும் தினக்குரலின் பணியில் ஒன்றாகும்.
இவ்வகையில் கடந்த 12 வருட காலத்தில் பல தடைக்கற்களைக் கடந்து சாதனைகளை நிலைநாட்டிய தினக்குரல், எதிர்வரும் வருடங்களிலும் இந்தப் பாதையில் செல்வதற்கு உறுதி பூண்டுள்ளது.